கால சர்ப்ப தோஷமா? யோகமா?

கால சர்ப்ப தோஷமா? யோகமா? என்பது காலம் காலமான பிரச்சினை தான்.ஜோதிடத்தில் உள்ள ஏராளமான முரண்பாடுகளில் ஒன்று இந்த கால சர்ப்பதோஷம் எனப்படும் ஒருவித அமைப்பாகும்.

கால சர்ப்பதோஷம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தில் ராகு-கேதுவிற்குள் மற்ற ஏழு கிரகங்களும் அடங்குவது கால சர்ப்பதோஷம் என்று ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற அமைப்பில் உள்ள ஜாதகத்தினைக் கொண்டு பிறந்தவர்கள் 33 அல்லது 35 வயதுவரை கஷ்டப்படுவார்கள் என்றும்அதன்பிறகு ஓஹோவென முன்னுக்கு வருவார்கள் என்றும் பலவிதமான கருத்துக்கள் பல்வேறு ஜோதிடர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடஆய்வில் ஈடுபட்டு பலவிதமான அமைப்புள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்களை ஆழமாகவும் மிக நுணுக்கமாகவும் ஆராய்ந்துள்ள எனக்கு இந்த காலசர்ப்ப தோஷத்தைப் பற்றிய ஆய்வின் முடிவில் கிடைத்த உண்மை என்னவெனில் இப்படி ஒரு தோஷமே இல்லை என்பதுதான்.

உண்மையில் காலசர்ப்ப தோஷம்

உண்மையில் காலசர்ப்ப தோஷம் என்பது அனுபவமற்ற கற்றுக்குட்டி ஜோதிடர்களால் மிகைப்படுத்தி கூறப்படும் ஒரு அமைப்புத்தான்.ஒருவரின் ஆரம்பகால வாழ்க்கை நன்றாக இல்லையா? அதன் காரணத்தை உங்களால் ஜாதகத்தில் உணர முடியவில்லையா?ராகுகேதுக்களுக்குள் நிறைய கிரகங்கள் அடங்கியுள்ளனவா?  போடு… அதன் தலையில் தூக்கிப் பழியை… என்பதுதான் இந்த விஷயத்தில் நடக்கிறது.

இந்தக் காலசர்ப்ப தோஷத்திலும் ராகுவை முன்னால் கொண்டு அதன்பின் ஏழு கிரகங்களும் அடங்கி இறுதியில் கேது இருப்பது ஒரு அமைப்பு என்றும். கேதுவை முன் நிறுத்தி அதன்பின் அனைத்துக் கிரகங்களும் அடங்கி இறுதியாக ராகு அமர்ந்து ஏற்படும் அமைப்பு என்றும் இருபிரிவுகளாக இந்த தோஷம் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க :ஹோரை சாஸ்திரம் வாழ்வை உயற்றும் சாஸ்திரம்

அனுமான சாஸ்திரம்

ஜோதிடம் என்பது ஒரு அனுமான சாஸ்திரம் என்பதையும் தாண்டி ஒரு பரிபூரண விஞ்ஞானம்தான் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்ற கருத்து முனைப்புக் கொண்டுள்ள நான் எந்த ஒரு யோகத்தையும், தோஷத்தையும் அதனுள் அடங்கியுள்ளசூட்சுமத்தை ஆராய்ந்த பிறகே நம்புபவன் என்பதால் இந்தக் கால சர்ப்பதோஷம் என்பது இடையில் வந்தவர்களால் சொல்லப்பட்ட இடைச்சொருகல் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் காலசர்ப்ப தோஷம் என்ற ஒன்று இல்லவே இல்லை. இதை என்னால் ஏராளமான ஜாதகங்களில் நிரூபிக்க முடியும்.

பிறகு எப்படி இல்லாத ஒன்று ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது எனில் நமது ஞானிகளால் கிரகமாலிகா யோகம் என்று ஒரு அமைப்பாக விளக்கப்பட்ட ஒரு யோகமே சற்றுத் திரிந்து ராகு-கேதுக்களுக்குள் இந்த யோகம் அமைந்தால் கெடுதல்களைத் தரும் என்று மனம்போன போக்கில் ஆய்வுநோக்கின்றி விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க :உங்கள் லக்கினமும் தொழில் லாபமும்

நான் ஏன் இத்தனை உறுதியாக காலசர்ப்ப யோகத்தை  மறுக்கிறேன் என்றால் இந்த தோஷம் உள்ளவர்கள் 33 வயதுவரை கடுமையான தரித்திர அமைப்பில் இருப்பார்கள் என்றும் அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறி ஜாதகர் உச்சத்திற்கு செல்வார் என்றும் ஏராளமான ஜோதிடர்கள் எழுதி இருக்கிறார்கள்.இதில் கவனிக்கக் கூடிய முக்கியமான அம்சம் என்னவெனில் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை ஒரு மனிதன் கஷ்டப்படுவதும் பின்னொரு வயதிற்கு பிறகு அவன் யோகமாக வாழ்வதும் தசாபுக்தி அமைப்பு சம்பந்தப்பட்டதுதானே தவிர ஜாதகத்தில் கிரகங்கள் அமையும் நிலை சம்பந்தப்பட்டது அல்ல.

கால சர்ப்பதோஷம் அமைப்பு

உதாரணமாக ஒரு மீனலக்னம், மீனராசி கொண்ட ஜாதகருக்கு கால சர்ப்பதோஷம் அமைப்பு இருந்து சரியாக 33 வயதில் அவருக்கு அந்த தோஷம் விலகும் போது எட்டில் ஆட்சிபெற்ற அஷ்டமாதிபதி சுக்கிரதசையும் அதன் பிறகு ஆறில் ஆட்சிபெற்ற ஆறுக்குடைய சூரியதசையும் 59 வயது வரை நடக்குமானால் அவர் 33 வயதிற்கு பிறகு உச்சத்திற்குச் செல்வாரா என்ன?என்றோ ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு இது போன்ற காலசர்ப்பதோஷ அமைப்பு இருந்து அவர் ஜாதகத்தில் இருந்த வேறுவித கெட்டஅமைப்புகளாலோ அல்லது தசாபுக்தி அமைப்புகளாலோ 33 வயதுவரை கஷ்டப்பட்டு பின்னர் நன்றாக இருந்ததை பார்த்த யாரோ ஒரு ஜோதிடர் எழுதிய இந்த காலசர்ப்பதோஷத்தை ஆய்வுமனப்பான்மை இன்றி அனைத்து ஜோதிடர்களும் அப்படியே ஏற்றுக்கொண்டு கடுகைப் பூசணிக்காயாக்கிய விஷயமே இந்த காலசர்ப்பதோஷம்.

அதிலும் லக்னமோ, ராசியோ ராகு-கேதுக்களுக்கு வெளியில் இருந்தாலும் அல்லது ஏதேனும் ஒரு கிரகம் வெளியில் இருந்தாலும் இது தோஷம்தான் என்று அடித்துக் கூறும் மனப்பாங்கில் பல ஜோதிடர்கள் இதற்கு விளக்க உரைகள் எழுதி இருக்கிறார்கள்.

நமது ரிஷிகள் அருளிய மூலநூல்களில் பெரிதாக சொல்லப்படாத இந்த அமைப்பைப் பற்றி ஒவ்வொரு ஜோதிடரும் இது இப்படிச் செய்யும், அது அப்படிச் செய்யும் என்று எழுதியுள்ளது அவர் சொல்லி விட்டார் அப்படித்தான் இருக்கும் என்ற சாய்ந்தால் சாய்கிற பக்கம்

சாயும் செம்மறியாட்டுக் கதைதானே தவிர உண்மையை ஆராய்ந்து சொல்லும் நிலை அல்ல.

அதே நேரத்தில் இதுபோன்ற காலசர்ப்ப தோஷ அமைப்பு இல்லாவிட்டாலும் வேறு சில நிலைகளில் ராகுவிடம் அனைத்துக் கிரகங்களும் சம்பந்தப்படும் நிலையில் ராகுவே அந்த ஜாதகத்தின் அனைத்து நன்மை தீமைகளுக்கும் பொறுப்பேற்பார். ஆனால் அதை காலசர்ப்பதோஷம் என்று சொல்லக்கூடாது.

மேலும் படிக்க :செவ்வாய் தோசத்தின் அறிவியல் உண்மைகள்

ராகு-கேதுக்களின் நட்சத்திரங்களில்

உதாரணமாக ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் அல்லது அந்த ஜாதகருக்கு நன்மை தர வேண்டிய கிரகங்கள் ராகு-கேதுக்களின் நட்சத்திரங்களில் அமர்ந்து ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் சுபத்துவமோ சூட்சுமவலுவோ அடையாமல் பாபத்துவம் மட்டுமே பெற்றிருக்கும்

நிலையில் வாழ்நாள் முழுவதுமே அந்த ஜாதகர் சுகப்படமாட்டார். அதோடு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பாக்கியங்களும் அவருக்குத் தாமதமாகவே கிடைக்கும்.

இதுபோன்ற அபூர்வமான சூழ்நிலைகளில் லக்னமும் பெரும்பாலான கிரகங்களும் ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயம் மற்றும் கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் அமர்ந்து இது போன்ற தடைகளை ஏற்படுத்தியுள்ளதை நான் நூற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அதேநேரத்தில் இதுபோன்ற அமைப்பில் கெடுபலன்கள் நடப்பதற்கு ராகுவும், கேதுவும் கெடுதல்கள் தரும் அமைப்பில் அந்த ஜாதகத்தில் அமர வேண்டும் என்பதும் முக்கியம்.சில குறிப்பிட்ட நிலைகளில் ஒரு ஜாதகத்தில் ஏழு கிரகங்களும் ராகுவை தொடர்பு கொள்ளும் நிலை ஏற்படலாம். இதுபோன்ற நிலை அமைந்து லக்னமும் ராகுவால் ஆக்கிரமிக்கப்படும் பொழுது அந்த ஜாதகருக்கு வாழ்வில் சரியான காலகட்டத்தில் கிடைக்ககூடியசாதாரண அமைப்புகளான கல்வி, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை சரியான சமயத்தில் அமைவதில்லை. அல்லது நிரந்தரமாகவே கிடைப்பதில்லை.

ஜோதிடத்தில் ஒரு பொதுவிதி என்பது ஏறத்தாழ அந்த விதி அமைப்புள்ள பெரும்பான்மையான எண்பது சதவீதம் பேர் அந்த விதி சொல்லும் அமைப்பினை அனுபவிப்பவர்களாக இருந்தால்தான் அது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதியாக, யோகமாக, தோஷமாக ஏற்றுக்கொள்ளப்படும்.காலசர்ப்பதோஷம் என்பது இந்த விதிக்குள் அடங்காது.

தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்

என்னதான் முழு முயற்சியுடன் பாடுபட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் முன்னேற்றமான நிலையினை அடையவே முடியாது. அப்படி கஷ்டப்படும் ஒருவர் 30 வயதுக்கு மேல் திடீரென உயர்வுகளை அடைவார். இளமைக் காலத்தில் கஷ்டங்களையே அனுபவித்து அனுபவித்து மனம் வெறுக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளான ஒருவர் வாழ்க்கையில் திடீரென்று உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார். எப்படி இருந்தவன் இப்படி உயர்ந்து விட்டானே என பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உயர்வுகள் உண்டாகும்.
இளம் வயதில் ஏன் கஷ்டப்பட்டார், 30 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தார்? என தெரிந்து கொள்ள, அப்படி முன்னேற்றமடைந்த ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால், அவளுக்கு கால சர்ப்ப தோஷம் உண்டாகி இருக்கும். கால சர்ப தோஷமானது 30 வயதுக்கு மேல் யோகமாக மாறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமைந்திருப்பது கால சர்ப யோகமாகும். ராகு, கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இல்லாமல் ஓரிரு கிரகங்கள் தனித்து வெளியே அமைந்தாலும் 80% அது  காலசர்ப தோஷமாகவே கருதப்படுகிறது. ராகு, கேது பிடிக்குள் இல்லாமல் தனியே வெளியில் அமைந்திருக்கும் கிரகங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயத்திலோ, கேதுவின் நட்சத்திரங்களான  அஸ்வினி, மகம், மூலத்திலோ இருந்தாலும் இதுவும் காலசர்ப தோஷமே ஆகும்.
கால சர்ப தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு திருமண நடைபெற தடை, புத்திர பாக்கியம் அமைய தாமதம், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, உத்தியோக உயர்வுகளுக்குத் தடை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை, எதைத் தொட்டாலும் சிக்கல்கள் பிரச்சினைகள் போன்றவை 30 வயது வரை ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றமடைய தடைகளைக் கொடுக்கும்.
முப்பது வயதுக்கு மேல் தோஷமானது யோகமாக மாறி வாழ்வில் எல்லையில்லா வளர்ச்சியைக் கொடுக்கும். எதிர்பாராத வகையில் உயர்வுகளும் உண்டாகும். வாழ்க்கை நிலையே மாறி, எடுக்கும்  காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், செல்வம், செல்வாக்கு உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினையும் உண்டாக்கும். தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகி பெயர், புகழ் யாவும் உயரும்.

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி

ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply