ஹோரை சாஸ்திரம் வாழ்வை உயற்றும் சாஸ்திரம்

ஹோரை சாஸ்திரம்

ஹோரை நேரம் என்றால் என்ன?

சுப ஹோரை, நல்ல நேரம் ஹோரை என்றால் ஒரு நாளை 24 பங்காக பிரித்து அதில் சூரியன் முதலாக 7 தினங்களுக்கும் உரிய கிரகத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆட்சிகாலமாக நிறுத்தி அதில் சூரியன்,செவ்வாய், சனி ஹோரை காலம் தவிற மற்ற காலங்களை சுபஹோரையாக கொண்டு சுபங்கள் செய்ய மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது. இராகு காலம் எமகண்டம் இருப்பினும் ஹோரை வைத்து சுபங்கள் செய்யலாம்.

மேலும் படிக்க : ஜென்ம நட்சத்திர மகிமையும் செய்யவேண்டியவையும்

ஹோரை கணிதம், விளக்கம்

ஓரை புவிமைய கோட்பாட்டின்படி கணக்கிடப்படுகிறது . கிரகங்கள் சூரினுக்கும் பூமிக்கும் இடையில் மற்றும் சூரியனுக்கு அப்பால் சுற்றும் கிரகங்கள் எனஇரண்டு நிலையாக பிரிக்கப்படுகிறது. இதில் மெதுவாக சுற்றுவது தொடங்கி வேகமாக சுற்றுவது வரை என கொள்ளப்படுகிறது

வெற்றி தரும் ஹோரை சாஸ்திரம்!

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நல்வழி காட்டவும் எத்தனையோ பிரிவுகள், பல்வேறு விதமான  வழிமுறைகள் உள்ளன. எந்தெந்த நேரங்களில், காலங்களில் என்னென்ன விஷயங்களை செய்யலாம். எதை எதை செய்யக்கூடாது என்பதை சாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது.

முன்னோர்கள் விளக்கம்

இதை நம் முன்னோர்கள், மூத்தோர்கள் காலம்காலமாக சிரத்தையாக கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அதன்படி காலம், நேரம், சகுனம், வேளை, சோழி, கிளி, குறி சொல்லும் ஜோதிடங்கள், டாரட் கார்டுகள் என பல அம்சங்கள் உள்ளன. இதைப் போன்ற விஷயங்களை பார்ப்பது நம் மனதில் ஊறிப் போன விஷயமாகும். பரவலாக எல்லோரும் கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகள் ஏற்படுத்துகின்ற ராகுகாலம், எமகண்டம், சந்திராஷ்டமம், அஷ்டமி, நவமி, கரிநாள், குளிகை போன்ற கால வேளைகளை தவிர்த்துவிடுவார்கள்.

மேலும் படிக்க : உங்கள் ஜாதகம் சொல்லும் உங்கள் தொழிலை

கிரகங்களின் பங்கு

இதைப் போன்ற சிரமங்கள் தருவதை தவிர்த்தாலும், மிகப் பெரும்பாலானோர் கிரக ஹோரைகளை பார்ப்பது கிடையாது. ஹோரை என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்க நேரத்தை குறிப்பிடுவதாகும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஹோரை. இது சுழற்சி முறையில் வரும். ஜோதிட சாஸ்திரத்தில் எல்லாமே சுழற்சிதான்.

காலச் சக்கரம் சுழலும் அடிப்படையில் சந்திரன் மிக அதிவேகமாக தினசரி ஒரு நட்சத்திரத்தை கடந்து செல்கிறது. அதைப் போலவே ஒரு நாளைக்கு 12 ராசிகளிலும் அந்தந்த கால நேரத்திற்கேற்ப லக்னம் மாறிக் கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் கிரகங்களுக்கு ஆளுமை நேரம் தரப்பட்டுள்ளது இதை ஹோரை என்கிறோம். இது ஆங்கிலத்தில் மருவி ஹோரா என்றும் பின்பு ஹவர் hour என்றும் மாறியது.

பூமத்திய ரேகை, தீர்த்த ரேகை, ஜாதகம் கணிப்பதற்கு தேவையான குறிப்பிட்ட ஊரின் டிகிரி போன்றவைகள் இணைந்ததுதான்  ஹோரை. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக்கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக்கூடிய கிரகங்கள், அதன் ஈர்ப்பு சக்தி மேலும் ஒளிக் கற்றைகள் எடுத்துக் கொள்கின்ற கால நேரம் இதையெல்லாம் கணக்கிட்டு கிரக ஆளுமை. சாஸ்திர தன்மைகளை உருவாக்கியுள்ளார்கள்.

ராகு  கேது ஆகிய இரண்டு கிரகங்களை தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஹோரை காலம் என்றுள்ளது. ராகு கேதுவிற்கு ஹோரை கிடையாது. ஆனால், தினமும் 11/2 மணி நேரம் ராகு காலம், எமகண்டம், என்ற கால அட்டவணை உள்ளது. இந்த கால கட்டங்களில் சுப விஷயங்களை தவிர்ப்பது வழக்கத்தில், பழக்கத்தில் உள்ளது. இந்த ஒன்றரை மணி நேரத்தை மூன்று பிரிவுகளாக முதல்  இடை  கடை என பகுத்து பார்ப்பதும் வழக்கத்தில் உள்ளது.

மேலும் படிக்க : பௌர்ணமி திதியும் பலனளிக்கும் பரிகாரமும்

இதில் ராகு காலத்தின் கடைசி முப்பது நிமிடங்களை அமிர்த கடிகை என்று பல ஜோதிட நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆகையால்  அமிர்த கடிகை காலமான கடைசி அரைமணி நேரத்தை சுப சகுனமாக, நல்ஹோரையாக கருதினார்கள். அந்தக் கணக்கில் பார்க்கும்போது எல்லா கிரகங்களுக்கும் பொதுவாக தலா 1 மணி நேரம் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே கிரக எண்களின் ஆதிக்கமும், கிழமைகள், நட்சத்திரங்களின் ஆதிக்கமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது. நம் வாழ்வில் தினமும் கிரக சக்திகளின் பங்களிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஹோரைகளின் காந்த அலைகள் நம்மைச் சுற்றி நடந்த வண்ணம் உள்ளது. நம்மை அறியாமலேயே ஹோரைகளின் ஆதிக்கத்தில் செலுத்தப்படுகிறோம். கடந்து போன விஷயங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கும்பொழுது அந்த குறிப்பிட்ட கால நேரத்தில் நாம் இப்படி நடந்து கொண்டோம் என்பதை உணர முடிகிறது.

ஆகையால் நாம் நம் மனக் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஹோரையின் ஆதிக்கத்தில் நாம் இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக நம் மனம் அமைதி இல்லாமல் எதையாவது சிந்தித்தபடி சஞ்சலத்துடன் இருந்தால் அந்தக் காலத்தில் ராகு காலம் அல்லது தேய்பிறை சந்திர ஹோரை நடைபெற்று கொண்டிருக்கும்.

காரிய பலம்

நாம் செல்லுகின்ற காரியம் சாதகமாக முடியும்போது அவரவர் லக்னாதிபதி எந்த கிரகமோ அந்த ஹோரை நடைபெறும். அசுப செய்திகள் வரும்போது பெரும்பாலும் எமகண்டம், சனி ஹோரை மற்றும் அவரவர் ஜாதகப்படி 6, 8க்குடையவர்களின் ஹோரைக் காலங்கள் நடைபெறும். காதல், களிப்பு, சபலம் எல்லாம் சந்திர, சுக்கிர ஹோரைகளில் வரும். அவரவர் ஜாகத்தில் 7ஆம் இடத்தின் கிரக ஹோரையில் மனம் காம வயப்பட்டிருக்கும். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதங்கள், வாக்குவாதங்கள் எல்லாம் செவ்வாய், சூரியன் ஹோரைகளில் இடம் பெறும். இப்படி பல்வேறு விஷயங்கள் அந்தந்த கிரக ஆதிக்க ஹோரையின் அம்சங்களைக் கொண்டு அமைகிறது. நடைமுறை வாழ்க்கையிலும் இது சரியாக இருப்பதாக ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க :ஆன்மீகத்தின் உணர்வும் அறிவியலின் உணர்வும்

ஹோரையின் கால நேரம்

கிரக ஆதிக்க நேரத்தை சூரிய உதயத்தை மையமாக வைத்து உருவாக்கினார்கள். சூரிய உதயத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமை நேரமாக உள்ளது. உதாரணமாக ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்குரிய நாள். இந்த நாளில் சூரிய உதயத்தின் முதல் ஒரு மணி நேரத்தை சூரியனின் ஹோரை என்று கணக்கிட்டு அதன் பிறகு அடுத்து வருகின்ற ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கிரகத்திற்கு என்று ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஒவ்வொரு ஹோரையாக வரும். மீண்டும் அதே வரிசையில் சூரியனில் இருந்து தொடங்கும்.

மேலும் படிக்க : செவ்வாய் தோசத்தின் அறிவியல் உண்மைகள்

இதற்கு 6183 என்ற சூத்திரத்தை வகுத்துள்ளனர். அதாவது காலை 6 மணிக்கு வரும் கிரக ஹோரை மீண்டும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் வரும். காலையில் எந்த கிழமையோ அந்த கிழமைக்குரிய கிரகத்தின் ஹோரையே முதலில் ஆரம்பமாகும். அதாவது, ஞாயிற்றுக் கிழமை என்றால் முதலில் சூரிய ஹோரையில் ஆரம்பமாகும், திங்கட்கிழமை என்றால் முதலில் சந்திர ஹோரையில் தொடங்கும். செவ்வாய் என்றால் செவ்வாய் ஹோரை. புதன் என்றால் புதன் ஹோரை, வியாழன் என்றால் குரு ஹோரை, வெள்ளி என்றால் சுக்கிர ஹோரை. சனி என்றால் சனி ஹோரையில் தொடங்கும்.

மேலும் படிக்க : ராசியை போல கரணமும் முக்கியம்

ஹோரைகள் தரும் பலன்கள்

சூரிய ஹோரை

செய்யக் கூடியவை: இந்த ஹோரையில் அரசாங்க விஷயங்களை ஆரம்பிக்கலாம். அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். கான்ட்ராக்ட், டெண்டர், வழக்கு சம்பந்தமாக பேசலாம். பூர்வீக சொத்து பரம்பரை சொத்து சம்பந்தமாக பேசலாம். தகப்பனாரின் உதவிகளை பெற அவரை நாடலாம். உயில் சாசனங்களில் கையெழுத்திடலாம். சொத்து சம்பந்தமான பத்திரங்களை பார்க்கலாம். சிவதரிசனம் செய்யலாம்.

செய்யக் கூடாதவை: சொந்த வீட்டில் கிரகப் பிரவேசம் செய்வது நன்மை தந்தாலும் இந்த ஹோரையில் பால் காய்ச்சக்கூடாது, வாடகை வீட்டிற்கும் அதுவே. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடாது.

சந்திரஹோரை

செய்யக் கூடியவை : புதிய தொழில், வியாபாரம் தொடங்கலாம் காய், கனி, பூ, தண்ணீர், அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை செய்யலாம். வங்கியில் கணக்கு தொடங்கலாம். காதலை வெளிப்படுத்தலாம். பெண் பார்க்கும் நிகழ்ச்சி
களுக்கு ஏற்பாடு செய்யலாம். தாயாரின் உதவியைப் பெற நாடலாம். பயணங்களைத் தொடங்கலாம். பெண்களின் உதவியை நாடலாம். அம்பாள், அம்மன் தலங்களுக்கு சென்று வழிபடலாம்.

செய்யக் கூடாதவை: தேய்பிறை சந்திர ஹோரையை எல்லா விஷயங்களுக்கும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாஸ்போர்ட், விசா, வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த முயற்சிகளும் செய்யக்கூடாது.

செவ்வாய் ஹோரை

செய்யக் கூடியவை : சகோதரர்கள், பங்காளிகளின் பிரச்னைகளை பேசலாம். சொத்து வாங்குவது, விற்பது பற்றி பேசலாம், அது சம்பந்தமாக ஒப்பந்தங்கள் போடலாம். முதன் முதலில் வாங்கும் இடத்தை சென்று பார்வையிடலாம். சகோதர உறவுகளின் உதவியை நாடலாம். வாங்கிய கடனை அடைக்கலாம்.

செய்யக் கூடாதவை : விவாதங்கள் கூடாது. வழக்கு சம்பந்தமாக பேசக் கூடாது. கடன் வசூல் செய்யப் போகக் கூடாது. பெண் பார்க்கும்
வைபவங்கள் கூடாது.

புதன் ஹோரை

செய்யக் கூடியவை : கல்வி சம்பந்தமாக எல்லா விஷயங்களையும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம். வங்கியில் புது கணக்கு தொடங்கலாம். மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம். வக்கீல்களைப் போய்ப் பார்க்கலாம். கம்ப்யூட்டர் வாங்கலாம். செல்போன் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம். நல்ல விஷயங்களுக்காக தூது போகலாம். பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.

செய்யக் கூடாதவை: பெண் பார்க்கும் சம்பவம் கூடாது. வீடு, நிலம் பற்றி பேசக் கூடாது. சொத்துக்களை பார்வையிடக் கூடாது.

குரு ஹோரை

செய்யக் கூடியவை : சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை. பொன் நகைகளை வாங்கலாம். புதுமணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம். வங்கியில் பிச்சட் டெபாசிட் செய்யலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம். கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ளலாம். யாகங்கள், ஹோமங்கள் செய்வதற்கான பொருட்களை வாங்கலாம்.

செய்யக் கூடாதவை : முதன் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்கக்கூடாது. புதுமணத் தம்பதிகளுக்கும் விருந்து, உபசாரம் செய்யக்கூடாது.

சுக்கிர ஹோரை

செய்யக் கூடியவை: பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்கு மிகச் சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிப்படுத்தலாம். வெள்ளிப்
பொருட்கள், வைர ஆபணரங்கள் வாங்கலாம். விருந்து வைக்கலாம். வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம். சொத்து விஷயங்கள் பேசலாம். கணவன், மனைவியிடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். பெண்களின் குழந்தையை உதவியை நாடலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அம்பாள், ஆண்டாள், அம்மன் தலங்களுக்குச் சென்று வணங்கலாம்.

செய்யக் கூடாதவை: நகை இரவல் தரக் கூடாது. கடன் கொடுக்கக் கூடாது. குடும்பப் பிரச்னைகளை விவாதிக்கக் கூடாது. துக்கம் விசாரிக்கக் கூடாது.

சனி ஹோரை

செய்யக் கூடியவை : சொத்து சம்பந்தமாக பேசலாம். இரும்பு சாமான்கள், பீரோ, வண்டி ஆகியவை வாங்கலாம். மரக்கன்றுகள் நடலாம். நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம். வாங்கிய கடனை அடைக்கலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் சென்று வரலாம்.

செய்யக் கூடாதவை : நோய்க்கு முதன் முதலாக மருந்து உண்ணக் கூடாது. மருத்துவரை சந்திக்கக் கூடாது. பிரயாணம் புறப்படக் கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடாது. முதன் முதலாக பிறந்த குழந்தையை போய்ப் பார்க்கக் கூடாது. துக்கம் விசாரிக்க செல்லக் கூடாது. எதிர்மறையான பலன்கள் பல சங்கடங்கள் பிரச்னைகள் சில கிழமைகளில் உண்டாகிறது. ஞாயிற்றுக் கிழமை சனி, செவ்வாய் ஹோரை, சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய் ஹோரைகள், செவ்வாய்க்கிழமையில் சனி ஹோரை, புதன் கிழமையில் குரு ஹோரை ஆகியவை அனுபவத்தில் பல சிரமங்களைத் தருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க : மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

கிழமைகளும் வெற்றி தரும் கிரக ஹோரைகளும்

ஞாயிறு   சூரியன், குரு, புதன் சந்திரன்
திங்கள்   சந்திரன், குரு, சூரியன்
செவ்வாய்  குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்
புதன்   புதன், சுக்கிரன், சூரியன்
வியாழன்   குரு, சந்திரன், சூரியன்
வெள்ளி  சுக்கிரன், புதன்
சனி   குரு, சுக்கிரன், புதன்

சுபஹோரைகள்: சுக்கிரன், புதன், சந்திரன், குரு ஆகிய நான்கு ஹோரை காலங்கள் சுபங்கள் செய்ய உகந்ததாகும்.

அசுப ஹோரைகள்: சூரியன், சனி, செவ்வாய் ஹோரைகளில் சுபங்கள் தவிற்பது நல்லது.

திருமணம், கிரகப்பிரவேசம், சாந்தி முகூர்த்தங்களில் லக்னத்திற்கு அடுத்து சுபஹோரை நேரம் மிகமுக்கியமானதாகும்.

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply