வீரபத்திரர் என்றால் வீரத்தை பத்திரமாக தருபவர் என்று பொருள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட மக்களின் கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டு வீரபத்திரரின் வழிபாட்டு முறைகளும் பலவிதமாக உள்ளன.
வீரபத்திரர் யார்
ஆதித் தமிழர்கள், தங்கள் கிராமங்களில் அறம் நிலவ வேண்டும் என்ற ஒரே தத்துவத்தின் அடிப்படையில் வீபத்திரர் கோவில்களை ஊர் மத்தியில் கட்டினார்கள்.
தமிழ்நாட்டில் சில கோவில்களில் மட்டுமே வீரபத்திரர் மூலவராக உள்ளார். பல கோவில்களில் திருச்சுற்றுத் தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் இருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வம் வீரபத்திரர்தான்.
மேலும் படிக்க : உணர்வு வெளிப்பாட்டின் விளைவுகளும் தீர்வுகளும்
வீரபத்திரர் பூஜை முறை
வீரபத்திரருக்கு எல்லாரும் பூஜை செய்துவிட முடியாது. அதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதிக்கு நிர்தேதோ தாரா யந்திர பூஜை என்று பெயர்.
வீரபத்திரருக்கு நடத்தப்படும் பூஜைகளில் வாய்க்கட்டுப்பூஜை தனித்துவம் கொண்டது. மம்சாபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் ஸ்ரீ வீரபத்திரருக்கு வாய்க்காட்டுப் பூஜையே செய்யப்படுகிறது.
திருப்பெருந்துறை வீரபத்திரர் ஆலயத்திலும் சேலம் குகை நரசிங்கபுரம் கோவிலிலும் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.
மதுரை வீரபத்திரசாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுவதில்லை. நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றி வழிபடுகின்றனர்.
வீரபத்திரருக்கு மூன்று கிளை உள்ள விளக்கை ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
வீரபத்திரரை வழிபடும் போது பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டால் அவர் மிகவும்மகிழ்ச்சி அடைவார். குறிப்பாக பஞ்ச வாத்தியங்களில் ஒன்றான உடுக்கை ஒலி ஒசை ஸ்ரீவீரபத்திரருக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் படிக்க : அறிவின் வகைகள் மற்றும் எண்ண புரிதல்கள்
வீரபத்திரர் நைவேத்தியம்
நைவேத்தியங்களில் ஸ்ரீ வீரபத்திரருக்கு நெய் கலந்து நன்கு பிசைந்த சோறு தான் மிகவும் பிடிக்கும். இந்த நைவேத்தியத்தை வெள்ளிக் கிண்ணத்தில் மட்டுமே வைத்து படைக்க வேண்டும்.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு பானகம் நைவேத்தியம் படைத்து வழிபட்டால், நினைத்தது நடக்கும்.
சிவகங்கை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீஅக்னி வீரபத்திரர் கோவிலில் தினமும் நவதானியங்களை சமைத்து நைவேத்தியம் செய்கின்றனர்.
பெரும்பாலான வீரபத்திரர் கோவில்களில் உயிர் பலி கொடுக்கப்படும் போது வீரபத்திரருடைய முகத்தை துணியிட்டு மூடி விடுவார்கள்.
பூவந்திக்கிராமம் மந்தை கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு மாதம் ஒருதடவை உயிர் பலி கொடுத்து அசைவப்படைப்புப் போட்டு பூஜை செய்கிறார்கள்.
மம்சாவரம் ஆகாச கருப்பண்ண சுவாமி கோவிலில் வீரபத்திரரை நினைத்து தேங்காய் உடைப்பது இல்லை.
மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்
வீரபத்திரர் வழிபாட்டு முறை
திருக்கழுக்குன்றம் ஸ்ரீவேதபுரீசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு நொச்சி, விளா, வில்வம் ஆகிய மூன்று இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது வழக்கத்தில் உள்ளது.
சிவபெருமானின் கருணையை வியந்து போற்றும் துதிகளுக்கு சமகம் என்று பெயர். மதுரை – இம்மையில் நன்மை தருவார் கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரர் முன்பு சமகம் படிக்கும் வழக்கம் உள்ளது.
திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரர் முன்பு சிவனுக்குரிய 108 போற்றிகளை கூறி வழிபாடு செய்கின்றனர்.
நாகையில் உள்ள வீரபத்திரர் கோவிலில் ஞாயிறு தோறும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள வீரப த்திரரை செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால், பங்காளிச் சண்டைகள் தீரும் என்பது ஐதீகம்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் இருக்கும் ஸ்ரீ வீரபத்திரருக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே சூடம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
வீரபத்திரரை ராகு கால நேரத்தில் வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை நேரத்திலும், செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரை நேரத்திலும் வீரபத்திரரை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
திருபுவனம் ஸ்ரீவீரபத்திரசாமி கோவிலில் பௌர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க விரும்புபவர்கள் அமாவாசை நாட்களில் வீரபத்திரரை வழிபட்டு வந்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் வெற்றிலை பட்டை மாலை சார்த்தி வழிபாடுகள் செய்கிறார்கள்.
பூரம், கிருத்திகை நட்சத்திர நாட்களில் வீரபத்திரரை வணங்கினால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
தக்கோலம் வீரபத்திரசுவாமி கோவிலில் கிருத்திகை நட்சத்திர நாளில் மிக, மிக சிறப்பாக பூஜைகள் நடத்தப்படுகிறது.
அக்னி நட்சத்திர நாட்களில் வீரபத்திரரை மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
மேலும் படிக்க : அறிமுகமும் நமது அடுத்த வாழ்வியலும்
வீரபத்திரர் விரதம்
சித்திரை மாதம் வரும் செவ்வாய்க்கிழமை 13 கிழமைகளில் வீரபத்திரருக்கு விரதம் இருந்து வழிபடலாம்.
வீரபத்திரருக்கு செய்யப்படும் பூஜைகளில் சூலாட்டுப் பூஜையான ஆட்டை வெட்டும் பூஜை மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெறும்.
வீரபத்திரர் வேட்டைக்கு செல்லும் போது கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வார். அவர் திரும்பி வந்ததும் மிதமுள்ள கட்டுச்சோறை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
மாடக்குளம் வீரபத்திரர் கோவிலில் புரட்டாசி மாதம் ஊர் மக்கள் திரண்டு வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இதை ஊர் பொங்கல் என்று அழைக்கிறார்கள்.
நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடும் போதும் வீரபத்திரருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது பல ஆலயங்களில் நடைமுறையில் உள்ளது.
சிவகங்கை காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள வீரபத்திரரை குலதெய்வமாக கொண்டவர்கள், எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் வீரபத்திரரிடம் உத்தரவு கேட்டு விட்டே செய்வார்கள்.
கள்ளிக்குடி வீரபத்திரருக்கு மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் தினத்தன்று களி செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.
சேலம் தாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் தினத்தன்று பக்தர்களில் ஒருவர் வீரபத்திரர் போல வேடம் அணிந்து வருவார். தீபாராதனைக்கு பிறகு கடவுளுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை, வீரபத்திரர் வேடம் போட்டவருக்கு அணிவிக்கப்படும். இது தமிழ்நாட்டில் தாரமங்கலம் கோவிலில் மட்டுமே நடைபெறுகிறது.
வீரபத்திரர் மாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அகோர பூஜை நடத்துவதை மதுரை வீரபத்திரர் கோவிலில் வழக்கமாக வைத்துள்ளனர்.
பேரையூர் ஸ்ரீவீரபத்திரர் கோவில் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று இரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். இந்த பூஜைக்கு “மாசிப்பச்சிடி” என்று பெயர்.
திருக்குளம்பூர் கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு மகா சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் காவடி சுமந்து வந்து வழிபாடு செய்கிறார்கள்.
வெங்கம்பட்டியில் உள்ள வீரபத்திரர் கோவிலில் பங்குனி உத்திரம் தினத்தன்று தீ மிதி விழா நடத்தப்படுகிறது.
திருச்சி சின்ன கம்மாளத் தெருவில் உள்ள வீரபத்திரசுவாமி கோவிலில் தெலுங்கு புத்தாண்டு தினத்தன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
வீரபத்திரர் சிவராத்திரி வழிபாடு
ஒரு சிவராத்திரி தினத்தன்று தான் தட்சன் யாகத்தை வீரபத்திரர் அழித்தார். எனவே சிவராத்திரியன்று வீரபத்திரரை வணங்கினால் நல்லது என்று கருதப்படுகிறது.
தென் மாவட்டங்களில் மகா சிவராத்திரி தினத்தன்று வீரபத்திரருக்கு பயறு அவித்து வைத்து வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.
வில்வம், தாமரைப்பூ, சாதிப்பூ மற்றும் நந்தியா வட்டம் இந்த 4 வகை மலர்களும் வீரபத்திரருக்கு மிகவும் பிடித்தமானவை.
மதுரை வடகரையில் உள்ள வீரபத்திரருக்கு சிவராத்திரி தினத்தன்று இரவு 21 இலைகள் போட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
சேவலை அறுத்து, சேவலின் ஈரல், நெஞ்சு, குடல் போன்ற பகுதிகளை தீயில் வாட்டி சுட்டு, அவற்றை வீரபத்திரருக்கு சில ஊர்களில் படையலாக வைப்பார்கள். இந்த வழிபாட்டுக்கு சூட்டையாங் கொடுத்தல் என்று பெயர்.
பொங்கல் சமைத்து அதனுள் கோழியை அறுத்து ரத்தம் ஊற்றி பிசைந்து, அதை 3 உருண்டைகளாகப் பிடித்து நள்ளிரவு 1 மணிக்கு ஆகாயத்தை நோக்கி வீசுவார்கள். அதை வீரபத்திரர் பெற்று கொள்வதால் ரத்த பொங்கல் கீழே விழாது என்கிறார்கள். இந்த பூஜையை ஆகாய பூஜை என்று அழைக்கிறார்கள்.
மசோபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் சிவராத்திரி தினத்தன்று நடக்கும் பூஜையில் 40 ஊர்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகா சிவராத்திரி தினத்தன்று தென் மாவட்டங்களில் அம்மன் கோவில்களில் நடைபெறும் உற்சவ ஊர்வலத்தில் மூங்கில் பிரம்பால் 8 கை செய்து, வீரபத்திராக வேடம் அணிந்து ஒருவர் முன்செல்வார். இதனை வீரபத்திரப் படலம் என்பார்கள்.
காஞ்சி பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சுவாமிகள் தம்தந்தை வழி குலதெய்வமான திருவிடைமருதூர் வீரபத்திரரை தினமும் வழிபாடு செய்து வந்தார்.
வீரபத்திரரை குலதெய்வமாக கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘வீ” என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களையே சூட்டுகிறார்கள்.
கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீ வீரபத்திரர், திருமண இடையூறுகளை நீக்கி அருள்பவராக கருதப் படுகிறார்.
வீரபத்திரரை குலதெய்வ மாக கொண்டவர்கள், திருமணம், நெல் அறுவடை, நெல் விதைப்பு என்று எதை செய்தாலும் வீரபத்திரரை வழிபட்டே பிறகு தொடங்குவார்கள்.
வீரபத்திரரை நினைத்து கும்பிட்டு வழங்கப்படும் திருநீறுக்கு பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற வற்றை விரட்டும் ஆற்றல் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
வீரபத்திரர் வழிபாட்டின் போது பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் ஒரு வகை வழிபாடு உள்ளது. இதற்கு தமரன் என்று பெயர்.
மேலும் படிக்க : பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்
மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,
நற்பவி நற்பவி நற்பவி
என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்
நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்