மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்.

மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்


 

  •  முகமது நபியோ புத்தரோ நல்லவராக வாழ்ந்தார் என்பதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? அது என்னுடைய நல்ல இயல்பையோ கெட்ட இயல்பையோ மாற்றி அமைக்கப்போகிறதா? நமது நன்மைக்காக, நமது விருப்பத்திற்காக நாம் நல்லவர்களாக இருப்போம்.

அந்தக் காலத்தில் யாரோ ஒருவர் நல்லவராக இருந்தார் என்பதற்காக நாம் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.

  • நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. எனவே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • இந்த மனித உடல்தான் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்த உடலாகும். மனிதனே மேலான ஜீவன், எல்லா மிருகங்களைக் காட்டிலும், எல்லாத் தேவர்களைக் காட்டிலும் மனிதன் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.
  •  இயற்கையை மீறி மேலெழுவதற்குப் போராடிக் கொண்டிருக்கும் வரையில்தான் மனிதன் மனிதனாக இருக்கிறான். இந்த இயற்கையானது அகம் புறம் என்று இரண்டு வகைப்படும். பல வேறு நாடுகளின் வரலாற்றை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் இயற்கையை வென்று தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யும் மக்கள் அதிகரிக்கும் போதுதான் ஒரு நாட்டிற்கு எழுச்சி வருகிறது என்பதை எப்போதும் நாம் காணலாம். இலௌகிக லாபத்தில் மட்டும் கருத்துச் செலுத்துபவர்கள் (Utilitarians), மெய்ப் பொருளை நாடும் இந்த முயற்சி பயனற்றது என்று எவ்வளவுதான் சொன்னாலும், அத்தகைய முயற்சி நின்று விடும் போது சமுதாயத்திற்கு அழிவு ஆரம்பித்து விடுகிறது. அதாவது, ஒவ்வொரு மனித இனத்தின் வலிமைக்கும் உயிர்நாடி அதன் ஆன்மிகப் பண்பில்தான் அடங்கியிருக்கிறது. என்றைக்கு ஆன்மிகம் தனது செல்வாக்கை இழந்து உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ, அன்று முதல் அந்தச் சமுதாயத்திற்கு அழிவும் ஆரம்பித்துவிடுகிறது.
  •  இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை யுடையவர்களாக்கிக்  வலிமை கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
  •  நன்மை தரக்கூடிய எல்லா சமுதாய மாற்றங்களும். உள்ளே இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஆன்மிகச் சக்திகளின் வெளித் தோற்றங்களே ஆகும். இந்தச் சக்திகள் வலிமை உடையனவாகவும், சரிவரப் பொருத்தமாக அமையக்கூடியனவாகவும் இருந்தால்,சமுதாயமும் தன்னை அதற்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளும்.ஒவ்வோர் மனிதனும் தன்னுடைய சொந்த முக்திக்காகத் தானே வேலை செய்தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழி இல்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த பொருந்தும். உண்மை நாடுகளுக்கும்… சமுதாயத்திலே இருந்து வரும் ஸ்தாபனங் களிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது மிகவும் எளிது. ஏனென்றால், எல்லா நிறுவனங்களும் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ குறைபாடு உடையவையாகவே தனியொரு மனிதனுக்கு இருக்கின்றன. ஆனால் அவன் எத்தகைய நிறுவனத்தின் ஆதிக்கத்தின் கீழ் உட்பட்டு வாழ்ந்தபோதிலும், அவன் தன் குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்கு யார் ஒருவர் உதவி செய்கிறாரோ அவரே மனித சமுதாயத்திற்கு உண்மையான நன்மை செய்பவராவார்.தனிமனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.
  • மேலும் படிக்க : மனதின் ஆற்றல்கள்
  • உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது. உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.
  •  மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள்.விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கப்பல்கள், தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களைச் சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
  • ‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில்,தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதையும் உன்தோள்மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
  •  உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
  • ஏன்? எதற்கு? என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நமது வேலையன்று. மாறாக, செயலில் ஈடுபட்டுச் செத்து மடிவது ஒன்றுதான் நமது கடன். மகத்தான காரியங்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றும். அவற்றை நாம் செய்து முடிப்போம் என்றும் உறுதியாக நம்பு.
  •  துரதிருஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால். இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பதுமேலானது.
  •  மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான். ஆனால் இறுதியில் அவன் இயற்கையை வென்று தனது சுதந்திரத்தையே பெறுகிறான். அவன் சுதந்திரத்தை அடைந்தவுடனே இயற்கை அவனுக்கு அடிமையாகிவிடுகிறது.
  •  ‘இயற்கையின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான் சுதந்திரம்’ என்ற கருத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அந்தக் கருத்தின் பொருள் என்ன என்று எனக்குப் புரியவில்லை. மனித வளர்ச்சியின் வரலாற்றின்படி, இயற்கைக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியாகும். அதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியை ஆக்கியமைத்திருக்கிறது.
  •  நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக. நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.
  • சண்டையிடுவதிலும் குறை சொல்லிக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.
  • தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய அற்பமான வேலைகளுக்கு முணுமுணுப்பவள் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும் முணுமுணுத்தபடியே அவன் நுன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான் அவன் தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்றுகொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்த கடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாக வந்து சேரும்.
  • உலக இயந்திரத்தின் சக்கரங்களிலிருந்து தப்பி ஓடாதே .மாறாக, அதன் உள்ளேயே நின்று கொண்டு. கர்மயோகத்தின் இரகசியத்தைக் கற்றுக் கொள். இயந்திரத்தின் உள்ளே இருந்து சரியானபடி வேலை செய்வதன் மூலமும் அதிலிருந்து வெளியே வந்துவிடுவது சாத்தியமே.
  •  நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்கி றான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிக ளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்ட வன் அல்ல..
  • என்னுடைய இலட்சியத்தை, உண்மையில் ஒரு சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்விகத் தன்மையை எடுத்துப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.
  • தூய்மை,பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
  • எப்போதும் விரிந்து மலர்ந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கிவிடுவது மரணம்தான். தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலுங்கூட இடம் கிடைக்காது.
  • தனக்கு ஆண்டவன் கொடுத்துள்ள அறிவாற்ற லைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக நம்புகிற வனை மன்னிப்பதைவிட, தன்னுடைய பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தி நம்பாமலிருக்கும் ஒருவனைக் கடவுள் மன்னித்துவிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள புராதன நூல்களில் கூறப்பட்டிருக்கிற தீர்க்கதரிசிகள், பெரியோர்கள் ஆகியவர்களைத் குறித்த உண்மைகளை நமது பகுத்தறிவானது உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் போது, அவர்களிடம் நாம் நம்பிக்கை வைக்கலாம். அதன் பின் அத்தகைய தீர்க்கதரிசிகளை நாம் நம்மிடையே பார்க்கும்போது அவர்களிடம் நம்பிக்கை வைப்போம். குறிப்பிட்ட ஒரு சில கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகத்தான் அவர்கள் விளங்குகிறார்களே தவிர, அவர்கள் விநோதமான மனிதர்கள் அல்லர் என்பதை அப்போது நாம் புரிந்துகொள்வோம்.
  •  உன்னுடைய குறிக்கோளை அடைவதற்கு நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது ? தோல்வியின் மூலம் மேலும் நாம் புத்திசாலிகளாகிறோம். காலம் எல்லை யற்றது.இதோ இந்தச் சுவரைப் பார். இந்தச் சுவர் எப்போதாயினும் பொய் பேசியிருக்கிறதா? ஆனாலும் அது எப்போதும் ஒரு சுவராகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.மனிதன் பொய் பேசுகிறான் – ஆனால் அவனே பிறகு ஒரு தெய்வமாகவும் ஆகிவிடுகிறான். ஏதாயி னும் ஒன்றைச் செய்துகொண்டிருப்பது மேல். அது தவ றாகவே இருந்தாலும்கூட அதை நீ பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒன்றுமே செய்யாமலிருப்பதை விட அது எவ்வளவோ மேலானது. பசு ஒருபோதும் பொய் சொல்வதில்லை. ஆயினும் காலமெல்லாம் அது ஒரு பசுவாகத்தான் இருக்கிறது. ஏதாவது ஒன் றைச் செய்!
  •  தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச செய்து கொண்டிரு. தீய சம்ஸ்காரங்களைத் தலைகாட்டாதபடி அழுத்தி வைப்பதற்கு அது ஒன்றே ஒன்றுதான் வழி.எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே. ஏனென்றால், அவன் ஒருவிதப் பழக்க வழக்கங்களின் தொகுப்பாக, குறிப்பிட்ட ஓர் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும்தான் விளங்குகிறான். அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்துவிட முடியும்.ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால்தான் உருவாகிறது. எனவே, மேலும் மேலும் மேற்கொள்ளும் பழக்கங்களால்தான் ஒழுக்கத்தை மேலும் சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்கமுடியும்… பிரம்மசரியம் அனுஷ்டிப்பவனு டைய மூளைக்கு அபாரமான ஆற்றலும் அதீதமான மனவலிமையும் உண்டு.
  • இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும் வகையில் நம்மை நாமே விட்டு வைத்தாலன்றி. நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
  •  நான் ஒரு சமயம் இமயமலைப் பகுதியில் பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். நெடுஞ்சாலை ஒன்று எங்கள் முன்பு நீண்டு இருந்தது. ஏழைத் துறவிகளாகிய எங்களைத் தூக்கிச் செல்வதற்கு ஆள் வைப்பது எங்களுக்கு இயலாத காரியம்.எனவே, வழி முழுவதும் நாங்கள் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. எங்கள் கூட்டத்தில் வயோதிகரான கிழவர் ஒருவர் இருந்தார். அவர், ‘ஐயோ, இதை எப்படிக் கடந்து செல்வது? இதற்கு மேல் ஒரு அடியும் என்னால் நடக்க முடியாது! என் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறது” சொன்னார். என்று”கீழே குனிந்து உங்கள் கால்களைப் பாருங்கள்* என்று நான் சொன்னேன். அவரும் அவ்விதமே நான் சொன்னபடி செய்தார். பிறகு அவரிடம் நான். ”இப்போது உங்கள் கால்களின் கீழே உள்ள இந்தப் பாதை, ஏற்கனவே நீங்கள் கடந்து வந்த சாலையாகும். மேலும் அதே சாலையைத்தான் நீங்கள் உங்கள் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்…. விரைவில் அதுவும் உங்கள் கால்களின் கீழ் வந்துவிடப் போகிறது”என்று கூறினேன்.மிக உயர்ந்த பொருள்களெல்லாம் உங்கள் காலடியின் கீழ் இருக்கின்றன. ஏனென்றால் உண்மையில் நீங்கள் தெய்விக நட்சத்திரங்களாக இருந்துகொண்டிருக்கிறீர்கள்.
  • கோழைகளும முட்டாள்களும் ‘இதுதான் விதி’ என்று சொல்வார்கள் என்பதாகச் சம்ஸ்கிருதப்பழமொழி சொல்லுகிறது. ஒன்று ஆனால் வலிமையுடைய மனிதனோ எழுந்து நின்று. ‘என்னுடைய தலைவிதியை நானே அமைத்துக் கொள்வேன் என்று சொல்லுகிறான். வயதாகி மூப்பு நிலையை அடைந்துகொண்டிருப்பவர்தாம் விதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். இளைஞர்கள் பொதுவாக ஜோதிடத்தின் பக்கம் வருவதில்லை.
  • ஒருவனுடைய இயல்பு எப்படிப்பட்டது. என்பதை உண்மையில் நீ தீர்மானிக்க விரும்பினால், அவன் செய்யும் பெரிய காரியங்களைக் கவனிக்காதே.ஒவ்வொரு முட்டாளும் ஒரு சமயம் இல்லாவிட் டால் மற்றொரு சமயம் வீரனாகிவிடுவான். ஒரு மனி தனை அவன் செய்யும் மிகச் சாதாரணமான காரியங்க ளின் போது நீ கவனித்துப் பார்க்க வேண்டும். ஏனென் றால் இத்தகைய சாதாரணச் செயல்கள்தாம், பெரிய மனிதன் ஒருவனுடைய உண்மையான இயல்பை உனக்குத் தெரிவிப்பனவாக இருக்கும். வாய்ப்புகள் மிகப் பெருமளவில் கிடைக்கும்போது மிகத் தாழ்ந்த மனிதன்கூட ஏதோ ஒரு வகையான உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுவிடுகிறான். ஆனால் எங்கு இருந்தா லும், யாருடைய இயல்பு எப்போதும் ஒரே மாதிரியான பெருந்தன்மை உடையதாக இருக்கிறதோ அவன் தான் உண்மையில் மிகப் பெரிய மனிதனாவான்.
  • பிரதிபலன் எதையும் சிந்திக்காமல்,நாம் உலகிற்குச் செலுத்தும் ஒவ்வோர் நல்லெண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கப்படுகிறது.அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்மச் சங்கிலியை இணைக்கும் கண்ணி ஒன்றை உடைத்தெறிகிறது. மக்களுள் மிகவும் தூயவர்களாகும் வரை மேலும் மேலும் அது நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
  • பகை. பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக்கொண்டால். தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.
  •  இயற்கையை எதிர்த்துப் போராடும் எல்லாவற்றிலும் உயிர் உணர்ச்சி இருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு உள்ள இடத்தில் உயிர் வாழ்வதற்கான அறிகுறி வெளியாகிறது. ஒரு சிற்றெறும்பைக் கொல்வதற்கு நீ முயற்சி செய்தால், அதுகூடத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உடனே எதிர்த்து நிற்கும். எங்கே போராட்டம் இருக்கிறதோ, எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ, அங்கு உயிர் இருப்பதற்கு உரிய அடையாளம் இருக்கிறது. உயிர் வாழ்வதற்கான உணர்ச்சி அங்கு வெளிப்படுகிறது.
  • மனிதன்தானே பணத்தை உண்டுபண்ணுகிறான்? பணம் மனிதனை உண்டுபண்ணியதாக எங்கே யாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும் ஒன்றாக இருக்கும்படி செய்தால், அதைச் செய்ய உன்னால் இயலுமானால், பணம் தண்ணீரைப் போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும்.
  •  இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும் செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனைபேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பதுதான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர் தோல்வி அடைந்து விழுந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறைஇடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.
  •  ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தைவிட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவான். எனவே அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. எதிர்ப்பும்ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.
  • ஒவ்வொரு ஜீவான்மாவிலும் தெய்விகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்விகத்தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான இலட்சிய மாகும்.இதைக் கர்மயோகம், கடவுள் வழிபாடு மனக்கட்டுப்பாடு, தத்தவ விசாரம் என்னும் இவற்றுள் ஒன்றினாலோ, பலவற்றினாலோ. எல்லாவற்றினாலோ செய்து சாதித்துச் சுதந்திரமாய் இருஇதுவே சமயத்தின் முழு உண்மை ஆகும். சமய சித்தாந்தங்களோ, ஆகமக் கட்டுப்பாடுகளோ, சமயச் சடங்குகளோ, சாஸ்திரங்களோ, கோவில்களோ, இவை போன்ற மற்றவையோ, இதற்கு உதவி புரியும் இரண்டாம் தரமான முக்கியத்துவமுடைய சாதனங்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன.
  • ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான். மிகவும் நல்லது. ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும். ஒருவனால் சிறிதுகூட ஜீரணிக்க முடியாத ஓர் உணவு, மற்றொருவனுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருக்கும். உனக்குப் பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அதுதான் வழி, சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் சங்கரிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்குத் தாவிவிடாதே.
  • கல்வியறிவில்லாத, பண்பாடற்ற, சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் இத்தகைய குறுகலான                             சட்டைக்குள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள்!
  • நீயாகவே சிந்தித்துப் பார். நாத்திகனாக இருந்து விட்டுப் போ! இந்த உலகமே பெரிது என்று நினைக்கும்                           இலெசிகனாக இருந்துவிட்டுப் போ! அதுகூட எவ்வளவோ பரவாயில்லை-மனதைப் பயன்படுத்திச் சிந்தித்துப்  பார்க்க வேண்டும். ‘இந்த மனிதனுடைய வழி தவறானது’ என்று சொல்வதற்கு உனககு என்ன உரிமை இருக்கிறது ? உனக்கு வேண்டுமானால் அது தவறாக இருக்கலாம். அதாவது, நீ அந்த வழியைப் பின்பற்றினால்  அதனால் உனக்குக் கேடு விளையக்கூடும். ஆனால் அதற்காக அந்த வழியால் அவன் கீழ்நிலையை அடைந்து விடுவான் என்பது அதன் பொருளல்ல.
  • எனவே, உன்னிடம் அறிவு இருந்து, மற்றொருவன் பலவீனனாக இருப்பதை நீ பார்த்தால், அதற்காக அவனை நீ கண்டிக்காதே. உனக்கு இயலுமானால் அவனுடைய நிலைக்கு இறங்கிச் சென்று அவனுக்கு நீ உதவி செய். தானாகவே அவன். வளர்ச்சி பெற வேண்டும். நான் அவனுடைய தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கூடை அறிவைத் திணித்துவிடுவேன். ஆனால், அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? அவன் முன்பு இருந்ததைவிட மேலும் சற்று அதிகம் மோசமானவனாகத்தான் இருப்பான்.
  • ”எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற் றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது. இதை நம்புங்கள். அப்போது அந்தப் பெரிய சக்தி உங்க ளிடமிருந்து வெளிப்படும்” என்ற இந்த உண்மையை அனைவருக்கும் சென்று போதிப்பாயாக…. எல்லை யற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டி ருப்பதை நீ உணரமுடிந்தால், நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப்போல் ஆக முடியும்.

என்றும் அன்புடன் :
S.சுதாகரன்

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply