மதமும் ஒழுக்கமும்

மதமும் ஒழுக்கமும்…!


  • பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ள வனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்.
  • மனிதன் முடிவில்லாத பிரம்மாண்டமான ஒரு வட்டம் போன்றவன். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை. ஆனால் அந்த வட்டத்தின் மையம் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது.கடவுள் பிரம்மாண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது. ஆனால் அந்த வட்டத்தின் மையம்,எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இதுதான்.
  • சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிரக் கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத் தெரிந்த அளவுக்குச் சாத்தானுக்கும் எல்லாம் தெரியும். கடவுளுக்குச் சமமான ஆற்றல்கள் சாத்தானுக்கும் உண்டு. ஆனால் தெய்விகத் தன்மை மட்டும்தான் அதனிடம் இல்லை. எனவே அது சாத்தானாகவே இருக்கிறது.இந்தக் கருத்தை நவீன உலகத்தோடு ஒப்பிட்டுப் பார். தெய்விகத் தன்மை இல்லாமல் பெறுகிற மித மிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
  • நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதே நல்லொழுக்கம். கீழ்நிலைக்கு இழுத்துச் செல்வதே தீய ஒழுக்கம். மிருக இயல்பு,மனித இயல்பு, தெய்விக இயல்பு என்ற இந்த மூன்று குணங்களால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். உன்னிடமுள்ள தெய்விகத் தன்மையை வளர்க்கக் கூடியதுதான் நல்லொழுக்கமாகும். உன்னிடமுள்ள மிருக இயல்பை அதிகரிக்கச் செய்வதே தீய ஒழுக்கம். மிருக இயல்பை உன்னிடமிருந்து அழித்துவிட்டு மனிதத்தன்மை கொண்டவனாக நீ மாற வேண்டும். அதாவது அன்புள்ளமும் தர்ம சிந்தனையும் உடையவனாக இருக்க வேண்டும்.பிறகு நீ அந்த நிலையையுங்கூடக் கடந்து சென்று தூய ஸத்-சித்-ஆனந்தமாக ஆக வேண்டும். சுடும் தன்மை இல்லாத நெருப்பாகவும், அற்புதமான அன்புள்ளவனாகவும், ஆனால் அதே சமயத்தில் பாமர மனிதனின் உணர்ச்சி வசப்பட்ட அன்பு என்ற பலவீனத்திற்கும் துன்ப உணர்ச்சிக்கும் உட்படாதவ னாகவும் நீ ஆகவேண்டும்.

மேலும் படிக்க : கல்வியும் சமுதாயமும்

  • சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்தபோதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம். அவனுக்கு உலகில் செல்வம் எதுவுமே இல்லாமலிருக்கலாம். அப்படி இருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால் அவன் இலௌகிகத்தில் ஒரேயடியாக மூழ்கியவனே ஆவான்.
  • நீ உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான். நீ சமய வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும். ஒருவன் வாடிய முகத்தோடு இருப்பது குன்ம வியாதியின் விளைவாக இருக்கலாமேயன்றி, அது மத வாழ்க்கை ஆகாது. துன்பம் பாவத்தினால் ஏற்படுகிறது. அதைத் தவிர, பாவம் விளைவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. இருளடைந்த முகங்களோடு உனக்கு என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது? அப்படி இருப்பது பயங்கரமானது. உன் முகத்தில் இருள் சூழ்ந்திருந்தால், அன்றையத் தினம் நீ வெளியே போகாமல் உன் அறையின் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இரு. வெளியுலகத்திற்கு இந்த நோயைச் சுமந்துகொண்டு போவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
  •   தீர்க்கதரிசிகளின் ஆற்றல் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்தே அறிந்ததில்லையா? நீ அது எங்கே இருந்தது? அவர்களின் அறிவாற்றலிலா இருந்தது? அவர்களில் எவராவது தத்துவத்தைப் பற்றியோ, மிகவும் நுட்பமான தர்க்க நியாயங்களைப் பற்றியோ அருமையான ஒரு நூலாவது எழுதியிருக்கிறார்களா? அவர்களில் ஒருவருமே அப்படி எதுவும் எழுதியதில்லை. ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்கள் பேசினார்கள்.
  • நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய்.                 புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமா னாகவே நீ ஆகிவிடுவாய்.
  • உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது; வலிமையைத் தருகிறது;                  உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வளவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது.
  • ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் இலட்சியம்: ‘மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது’ என்பதுதான். மேலும், ‘கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபடமுடியும்? இதுவே வேதாந்தம் அறிவுரையாக வழங்கும் செய்தியாகும்.
  • நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பதுதான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது – இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று  நான் நம்புகிறேன் .
  • ‘உன்னிடமுள்ள தெய்விகத் தன்மைதான், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்’ என்பதற்கு உரிய சான்றாகும். நீ ஒரு தீர்க்கதரிசியாக இல்லாவிட்டால் கடவுளைப் பற்றிய எந்த உண்மையும் ஒரு போதும் இருந்திருக்க இல்லாவிட்டால், முடியாது. கடவுள் நீ கடவுளாக என்ற ஒருவர் இருக்கவில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை இந்த உண்மையே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியம் என்று வேதாந்தம் சொல்லுகிறது.நாம் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகவே ஆகவேண்டும். நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத்தான் இருக்கிறாய். ஆனால் அதை நீ அறியாமல் மட்டுமே இருக்கிறாய். இதை நீ உணரவே வேண்டும்.ஆன்மாவினால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது மதத்திற்கு மிகவும் முரண்பட்ட கருத்தாகும். பாவம் என்பது ஒன்று உண்டென்றால், அது, ‘நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள்’ என்று சொல்வதுதான்.
  • கடவுள் இல்லாதது என்று எதுவுமே இல்லை என்று வேதாந்தம் சொல்லுகிறது. உயிருள்ள கடவுள்நீ தெய்வத்தன்மை நிறைந்தவனாகவே எப்போதும் இருந்து கொண்டிருக்கிறாய். எப்போதும் ஒரு தீர்க்கதரிசியாகவே இருக்கிறாய். கடவுளாக இருக்கிறாய் என்று இங்கு அத்வைத முறையில் சுவாமிஜி குறிப்பிடுகிறார்.  உனக்கு உள்ளளேயே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்க ளையும் கட்டிக்கொண்டிருக்கிறாய். மேலும், எல்லா விதமான கற்பனைப் பிதற்றல்களிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறாய். மனித உடலிலுள்ள மனித ஆன்மா ஒன்றுதான் வழிபட வேண்டிய ஒரே கடவுளா கும். எல்லா விலங்குகளுங்கூடத் தெய்வத்தின் கோயில்கள் தாம். ஆனால், மனிதனே இவற்றுள் மேலானவன். கோவில்களில் தாஜ்மகாலைப் போல மனிதன் உயர்ந்தவன். கடவுளை நான் அத்தகைய கோவிலில் வழிபட முடியவில்லை என்றால், வேறு எந்தக் கோயிலும் எனக்கு எவ்விதப் பயனையும் தரப் போவதில்லை.
  • உனக்கு உள்ளளேயே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்க ளையும் கட்டிக்கொண்டிருக்கிறாய். மேலும், எல்லா விதமான கற்பனைப் பிதற்றல்களிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறாய். மனித உடலிலுள்ள மனித ஆன்மா ஒன்றுதான் வழிபட வேண்டிய ஒரே கடவுளா கும். எல்லா விலங்குகளுங்கூடத் தெய்வத்தின் கோயில்கள் தாம். ஆனால், மனிதனே இவற்றுள் மேலானவன். கோவில்களில் தாஜ்மகாலைப் போல மனிதன் உயர்ந்தவன். கடவுளை நான் அத்தகைய கோவிலில் வழிபட முடியவில்லை என்றால், வேறு எந்தக் கோயிலும் எனக்கு எவ்விதப் பயனையும் தரப் போவதில்லை.
  • சமயசாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை; அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வதுதான் சமயசாதனையின் முழு உண் மையாகும். ‘கடவுளே! கடவுளே!’ என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட் டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற் றுகிறவனே சான்றோன் ஆவான்.
  • ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன்கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும். எல்லையில்லாத சக்தி சுருள் சுருளாக இந்தச் சிறிய மனித உடலுக்குள் சுருட்டி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தி விரிந்து பரந்து கொண்டே இருக்கிறது. இதுதான் மனிதனுடைய வரலாறு, சமயத்தின் வரலாறு, நாகரிகத்தின் வரலாறு, முன்னேற்றத்தின் வரலாறு ஆகிய அனைத்துமாகும்.
  • மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை இலட்சியமாகும். மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது அறிவுடைய செயலாகாது. ஒருவன் இங்கேயே, இப்போதே,இன்பத்தைப் பெற வேண்டும். இப்படிப்பட்ட இன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.
  • எப்போதெல்லாம் எந்த ஒரு மதம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் அந்த மதத்துக்குப் பொருளாதார வலிமை இருக்க வேண்டும். அதைப் போல ஆயிரக்கணக்கான மதப் பிரிவுகள் அதிகாரத்திற்கு வரப் போராடியபடி இருக்கலாம். ஆனால், உண்மையில் பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்கக் கூடிய மதம் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்றும். வயிறு தான் மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவன் நடந்து செல்லும் போது வயிறுதான் முதலில் போகிறது. பிறகு அதைத் தொடர்ந்து அவனுடைய தலை போகிறது, இதை நீங்கள் பார்த்ததில்லையா? மனிதனின் தலை முதலில் போகப் பல யுகங்கள் ஆகும். உங்களுடைய குழந்தைக் கனவுகள் கலைய ஆரம்பித்து, பொருள்களை உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்க்க ஆரம்பிக்கும்போது, உங்களுடைய தலை போய் விடுகிறது. தலை முதலில் போக ஆரம்பிக்கும் அதே சமயத்தில் நீங்களே வெளியே போய்விடுவீர்கள்.
  • இரசாயனமும் இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்தப் பௌதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப் போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் இரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தைப் படிக்க வேண்டும். உன்னுடைய மனம், இதயம், ஆகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும்.
  • ஞானி பெரும்பாலும் பௌதிக விஞ்ஞானம் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தமக்குள் இருக்கும் புத்தகத்தைப் படிக்கிறார். அது பௌதிக விஞ்ஞானத்தைத் தெரிந்து கொள்வதற்குத் தவறான புத்தகமாகும்.விஞ்ஞானியுங்கூடப் பெரும்பாலும் மதத்தைப் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால், அவருங்கூடத் தவறான புத்தகத்தையே படிக்கிறார்; அதாவது அவர் தமக்கு வெளியே உள்ள புத்தகத்தைப் படிக்கிறார்.
  • ‘நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்தத் தத்துவங்களை எல்லாம் அனுபவித்து அறிந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றை என்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால், நான் எதையுமே நம்புவது கிடையாது’ என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம். ‘என் வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு நான் முயற்சி செய்தேன்; ஆனால் அதிலே ஒன்றுமில்லை’என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள். ஆனால் அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும் காண்பாய்: ஒருவர் இரசாயன சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பெரிய விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் உன்னிடம் வந்து இரசாயனத்தைப் பற்றிச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். “நான் இரசாயன விஞ்ஞானியாகத் திகழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அப்படியிருந்தும் என் முயற்சியில் நான் ஒன்றும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை,எனவே இரசாயனத்தைப் பற்றிய எதையும் நான் நம்புவதில்லை” என்று நீ அவரிடம் சொல்வாயானால் அவர் உன்னைத் திருப்பி, “எப்போது நீ முயற்சி செய்தாய்?” என்று கேட்பார். “நான் தூங்கச் செல்லும் போது, ‘ஓ இரசாயனமே! நீ என்னிடம் வா’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். அது என்னிடம் வரவே இல்லை” என்று நீ சொல்வாய். இரசாயன விஞ்ஞானி உன்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, ”அப்பனே! இரசாயனத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அது வழியே அல்ல. நீ இரசாயனப் பரிசோதனைச் சாலைக்குச் சென்று. எல்லா வகையான அமிலங்களையும் காரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு ஏன் அவ்வப்போது உன் கைகளைச் சுட்டுப் பொசுக்கிக் கொள்ளவில்லை? நீ அப்படிச் செய்திருந்தால் இரசாயனத்தைப் பற்றிய ஞானம் உனக்கு வந்திருக்கும் ” என்று சொல்லுவார். மதம் சம்பந்தமாக அப்படிப்பட்ட பெரிய முயற்சியை நீ எடுத்துக்கொள்கிறாயா ? ஒவ்வொரு துறைக்கும் அதைக் கற்பதற்கென்று ஒரு தனி வழிமுறை இருக்கிறது. அத்தகைய முறையில்தான் மதத்தையும் கற்க வேண்டும்.
  • இலெளகிக உலகம் பற்றிய சக்தியின் மையமாக ஐரோப்பா இருக்கிறது. அது தன்னுடைய இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையாக அது தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால், இன்னும் ஐம்பதே ஆண்டுகளில் நொறுங்கி அழிந்துவிடும். ஐரோப்பாவை இத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றக் கூடியவை உபநிஷத் உண்மைகளே ஆகும். (சுவாமிஜி 1897-இல் சொன்னது.)
  • வேதங்கள், பைபிள், குரான் ஆகிய இவற்றுக்கும் அப்பால் மக்களை நாம் அழைத்துப் போக விரும்புகிறோம். என்றாலும் இந்தச் செயலை வேதங்கள், பைபிள், குரான் ஆகியவற்றைச் சமரசப்படுத்தி வைப்பதன் மூலமாகத்தான் சாதிக்க முடியும். எல்லா மதங்களும், ஒரு பரம்பொருளான இந்த உண்மையை மனிதகுலத்திற்குப் போதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், ஒவ்வொருவனும் தனக்கு மிகவும் பொருத்தமாக உள்ள பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வான்.
  • ஒழுக்கம், உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலைபெற்றிரு. மத சம்பந்தமான தத்துவ உண்மைகளைப் போட்டு உனது மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒருபோதும் பாவம் செய்வதில்லை. மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை.
  • சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம் ஆகும்.
  • ஒரு மனிதன் மிகவும் அருமையான நடையில் சிறந்த கருத்துக்களைப் பற்றிப் பேசுபவனாக இருக்கலாம். ஆனால், அது மக்களைக் கவருவதாக இருக்காது. மற்றொருவன் பேச்சில் அழகிய மொழி, கருத்து என்னும் இவற்றுள் எதுவும் இல்லாமலிருக்கலாம். ஆனால், அவனுடைய சொற்கள் கேட்பவர்களின் உள்ளங்களைக் கவர்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்தச் சக்தி ஓஜஸ்ஸினால் வருவதாகும்…. கற்பொழுக்கம் உடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸ்ஸை மேலே எழுப்பி மூளையில் வைக்க சேமித்து முடியும். ஆகையால்தான் பிரம்மசரியம் எப்போதும் மிகவும் உயர்ந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டு வருகிறது. ஒருவன் பிரம்மசரியத்திலிருந்து தான் வழுவியதாக உணர்ந்தால், ஆன்மிகச் சக்தி அவனிடமிருந்து போய்விடுகிறது. அத்தகையவன் தன் மனஉறுதியை இழந்துவிடுகிறான். இதனால்தான், மகத்தான ஆன்மிக வலிமையைப் பெற்ற பெரியோர்களை உருவாக்கித் தந்த உலகிலுள்ள எல்லா மதச் சம்பிரதாயங்களும் பரிபூரணப் பிரம்மசரியத்தை   எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கின்றன .
  • நீதிநூல்கள் எப்போதும் ‘நான் அல்லேன், நீயே என்று சொல்லுகின்றன. அவற்றின் இலட்சியம் ‘சுயநலம் ‘ அல்ல, ‘சுயநலமின்மை’ என்பதே ஆகும்.ஒருவன் புலன்களின் மூலம் எல்லையற்ற ஆற்றலையோ, முடிவில்லாத பேரின்பத்தையோ அடைவதற்கு முயற்சி செய்யும் போது, அவன், தன் குறுகிய இயல்பை விடாமல் பற்றிக்கொண்டிருக்கி றான். வீணான இந்த இயல்பை நாம் கைவிட வேண் டும் – இதையேதான் நீதி நூல்கள் கூறுகின்றன.”நானே முதலில் இருக்க வேண்டும் என்று புலன்கள் கூறுகின்றன. ‘நான் கடைசியில் வைக்கப் பட வேண்டும்’ என்று நீதிநூல்கள் கூறுகின்றன. இந் தத் தியாகத்தின் அடிப்படையில்தான் எல்லா நீதி நூல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலௌகிக உலகில் உள்ள ‘நான்’ என்னும் குறுகிய நினைவை வளரவொட்டாமல் அழிக்கும் முறையில்தான் நீதி நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.”அகண்டமான மெய்ப்பொருள் இந்த இலௌகிக உலகில் ஒருபோதும் வெளிப்படுவதில்லை. அவ்விதம் வெளிப்படுவதற்குச் சாத்தியமும் இல்லை. அது அப்படி வெளிப்படும் என்று நாம் நினைத்துப் பார்க்கவும் வழி இல்லை.
  • மக்கள் ஏன் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை இலௌகிகப் பயன்களை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவனுடைய கருத்துக்களால் விளக்கிக் காட்ட முடியாது. ஏனென்றால். முதலாவதாக. அப்படிப் பட்டவனுடைய மனப்பான்மையிலிருந்து எந்த விதமான ஒழுக்க நெறியையும் நாம் பெற முடியாது. மெய்ப்பொருளை நாடிச் செல்லும் நமது முயற்சியும், புலன்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைவதற்கு மேற்கொள்ளும் முயற்சியும் ஆகிய இவை நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை; அசட்டுத்தனமானவை; அவற்றை நாம் புறக்கணித்துக் கைவிட்டுவிட வேண்டும் என்று அவள் விரும்புகிறான்.ஆனால் அதே மூச்சில் அவன். நம்மை நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிக்கும்படியும் உலகிற்கு நன்மை செய்யும்படியும் கூறுகிறான். உலகத்திற்கு நான் ஏன் நன்மை செய்ய வேண்டும்? நன்மை செய்வது இரண்டாவதாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.முதலில் நமக்கென்று ஓர் இலட்சியம் இருந்தாக வேண்டும். ஒழுக்கமாக இருப்பதே நம்முடைய இலட்சியத்தின் முடிவல்ல. மாறாக, அது ஓர் இலட்சியத்தை அடையச் செய்யும் பாதையாக மட்டும்தான் இருக்கிறது.
  • முடிவான இலட்சியம் என்ற ஒன்று இல்லாமற்போ னால், நாம் ஏன் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்? நான் எதற்காக மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்? நான் ஏன் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யக்கூடாது? இன்பமாக இருப்பதுதான் மக்களுடைய இலட்சியம் என்றால், நான் என்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டு மற்றவர்களை ஏன் துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாது? அப்படிச் செய்வதி லிருந்து என்னை எது தடுத்து நிறுத்துகிறது?இரண்டாவதாக, இலெளகிகப் பயன் வேண்டும் என்ற அடிப்படை மிகவும் குறுகலானது. இப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் தற்காலச் சமுதாயத்தின் சூழ்நிலைகளில் மட்டும்தான் வேலை செய்ய முடியும். இந்தச் சூழ்நிலைகளைக் கடந்து, அப்பால் அந்தக் கருத்துக்களுக்கு எந்தவித மதிப்பும் கிடையாது. ஆனால் மதம், ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றலிருந்து பெறப்படும் ஒழுக்கம்,நீதி ஆகிய இவை பரந்த மனிதகுலம் முழுவதிலும் புகுந்து நற்செயலாற்ற முடியும். அது ஒரு தனி மனிதனை எடுத்துக்கொள்கிறது. என்றாலும், தொடர்புகள் அனைத்தும் அதன் அகண்டமான மெய்ப்பொருளோடு தொடர்பு கொண்டவையே ஆகும். ஏனென்றால், சமுதாயம் என்பது இத்தகைய தனி மனிதர்கள் பலருடைய ஒரு தொகுப்பே தவிர வேறு இல்லை.

என்றும் அன்புடன் :

பொன்னி சுதாகரன்,

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply