அன்னையின் வயிற்றில் பிறந்த ஒரு ஆண் (அ) பெண் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு தக்க வயதடைந்ததும் துணை ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். அப்படித் தேர்ந் தெடுத்துக் கொள்ளும் துணை அவர்களின் வாழ்வு முடியுமட்டும் இன்பம், துன்பம் அனைத்திலும் பங்குகொண்டு, தங்களின் வாழ்க்கை பயனுள்ளதுதான் என்பதை அறிவிக்குமுகமாக வாரிசுகளையும் உருவாக்குகின்றார்கள். வாழையடி வாழையாக குடும்பம் தழைப்பதற்கு முதலில் தேவைப்படுவது வாழ்க்கைத் துணைதானே!
ஜாதகத்தில் பன்னிரண்டு பாவங்களும் முக்கியமானவைகள் தான். எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று பேதம் பார்க்க முடியாது. எந்த பாவம் சிறப்பை இழந்தாலும் பாதிப்பு உண்டுதான். எனினும், லக்ன பாவம்தான் ஜாதகத்தில் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்? உயிர் இருந்தால்தானே உடல் இயங்கும்? உடல் இயங்கினால் தானே மற்ற அனைத்தையும் இயக்க முடியும்? எனவே உயிர் எனப்படும் லக்னம் முதல் பாவமாக ஜாதகத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
அம்மாதிரி முக்கியமான லக்னம் எனப்படும் உயிர் ஸ்தானத்துக்கு நேர் எதிரில் உள்ள ஏழாம் பாவத்தை எதற்குக் கொடுத்துள்ளார்கள் என்பது நாம் அறிந்ததுதான். உயிர் உள்ளவரை தனக்கு ஒரு துணை தேவை என்பதால் வாழ்க்கைத் துணைக்கு உயிர் பாவத்துக்கு நேர் எதிரில் உள்ள பாவத்தை கொடுத்துள்ளதில் இருந்து வாழ்க்கைத் துணைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பது புரியும்.
நாம் உருவாகி உலகில் வாழ உதவியாயிருந்த அன்னைக்கு நான்காம் இடத்தையும், தந்தைக்கு ஒன்பதாம் இடத்தையும் தான் கொடுத்துள்ளார்கள். இதனால் இவர்கள் இருவரும் முக்கியம் அல்ல என்று கூறிவிட முடியாது. இவர்களை விடவும் வாழ்க்கைத் துணை அதிமுக்கியம் என்ற கருத்தில் தான் லக்னத்துக்கு நேர் எதிர் பாவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஏழாம் பாவத்தை களத்திர பாவம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. களத்திரம் என்றால் மனைவி என்று மட்டுமே பொருள் கொள்ளக் கூடாது.
கணவனுக்கு மனைவி பாவம் என்று கூறுவதுபோல் மனைவிக்கு கணவன் பாவம் என்றும் கூறவேண்டும். கணவன், மனைவி ஆகிய இருவரைப் பற்றியும் கூறுவதுதான் களத்திர பாவம். இந்த பாவத்தைக் கொண்டுதான் இல்வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த பாவத்தில்தான் எத்தனை நுணுக்கங்கள் மறைந்துள்ளது. அனைத்து நுணுக்கங்களையுமே நாம் முற்றிலும் அறிந்து கொள்ள இயலுமா? இந்த சிறு நூலிலே அத்தனை விளக்கங்களையும் அளித்துவிட முடியுமா?
முடியாதுதான்! என்றாலும், கூடியமட்டும் இந்த பாவத்தின் ஆழத்தை உங்களுக்குக் காண்பித்து, அதன் அடிப்பகுதி வரை நீங்கள் சென்றுவர இச்சிறு நூல் வழிகாட்டும். நுனிப்புல் மேய்ந்து விட்டு திருப்தி பெறுவதைவிட, மேலும் சற்றே ஆழமாகவும், அகலமாகவும் மேய்வது சிறந்ததுதானே? பிள்ளைக்குப் பெண்ணையும், பெண்ணுக்குப் பிள்ளையையும் பொருத்தம் பார்க்க ஜாதகங்களை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் வருகின்றார்கள். ஜோதிடரோ பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பத்து பொருத்தங்களைக் கரைக்குப் போட்டு, பத்துக்கு ஏழு பொருத்தம் பேஷாகச் செய்யலா ம் என்று கூறிவிட்டால் போதுமா?
இம்மாதிரி பத்துக்கு இத்தனை என்று கூறிவிடுவது சுலபம்தான். ஜாதகம் இல்லாமல் வெறும் பெயருக்குக்கூட பொருத்தம் பார்த்து இணைத்துவிடலாம்தான். இது மட்டுமே இல்வாழ்க்கையின் வெற்றிக்குப் போதுமா? எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் உருண்டு ஓடிவிடுமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால், போதாது என்பதுதான் பதிலாக அமையும். காரணம் எந்த அளவுக்கு இவைகளையெல்லாம் நுணுக்கமாகக் கவனிக்க வேண்டுமோ அதை நாம் கவனிக்கவில்லை. பொருத்தம் திருப்தி, நன்றாகச் செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டி செய்து வைக்கப்பட்ட திருமணம், பசுங்கொடி போல் செழிக்காமல் பட்டுப்போவதற்குக் காரணம் என்ன?
ஆயிரங்காலத்துப் பயிர் என்று வர்ணிக்கப்படும் திருமண பந்தம் இடையிலேயே கருகிவிடக் காரணம் என்ன? பிரியாமல் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பெரியவர்களால் ஆசிர் வதிக்கப்பட்ட வாழ்க்கையில் பிரிவு ஏன் ஏற்பட வேண்டும்? இதற்கு ரெடிமேடான பதில் “விதி” என்பதுதான். அவர்கள் “விதி” அவ்வளவுதான். முடிந்தது கதை. எவ்வளவு சுலபமான பதில். இந்த சுலபமான பதிலை கேட்பதற்காகத்தான் இத்தனை சிரமப்பட்டு இவர்கள் இருவரையும் இணைத்து வைத்தார்களா? விதி வலியதுதான். ஆனால் அந்த விதி இத்தகையதுதான் என்று ஜோதிடர்கள் நிர்ணயம் செய்ய வேண்டாமா?
எவ்வாறு ஒவ்வொரு ஜாதகத்திலும் களத்திர பாவம் கண்டவுடன் உள்ளது? இவர்கள் இல்வாழ்க்கையின் அடித்தளம் எவ்வாறு உள்ளது என்று அளவிட வேண்டாமா? தீமைகளைக் உள்ளது என்று அஏதேனும் உள்ளதா என்று செய்ய வேண்டாமா? எதையும் கூர்ந்து செய்ய வேண்டயாக சரிசெய்யலாம் என்று கவனிக்காமல் கூறிவிடுவது. அது தோல்வியடைந்தால் ஆயிரம் சமாதானம் தேடுவது!
அதைவிடக் கொடுமையானது என்னவெனில் நல்ல பொருத்தம் உள்ள ஜாதகங்களைச் சரியாக ஆய்வு செய்யாமல் மேலெழுந்தவாரியாக பார்த்துவிட்டு, இதற்கு பொருத்தம் இல்லை என்று கூறிவிடுவது. பெண் நட்சத்திரங்கள் மூலமா மாமனார் இருக்க மாட்டார். ஆயில்யமா மாமியாருக்கு ஆபத்து. கேட்டையா மூத்த மைத்துனருக்கு ஆகாது. விசாகமா இளைய மைத்துனர் அவ்வளவுதான். இது என்ன? இதுதான் முடிவா? அப்படியென்றால் இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் களுக்குத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் பாக்கியமே இல்லையா? இவர்களெல்லாம் சந்நியாசினியாகி விட வேண்டியதுதானா? இப்படி வெறும் நட்சத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு பலன் கூறிவிட முடியுமா? அது முற்றிலும் சரியாக அமைந்துவிடுமா?
அடுத்து செவ்வாய் தோஷம். இந்தப் பெயரைக் கேட்டாலே பல ஜோதிடர்களுக்கு அலர்ஜி. பாம்பைக் கண்டதுபோல் நடுங்குவார்கள். உண்மையிலேயே ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம் ராகு, கேதுக்களால் ஏற்பட்டிருக்கும். அதைக்கூட விட்டு விடுவார்கள். இந்த செவ்வாய் தோஷத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு 2, 4, 7, 8,12-ல் இருந்தால் தோஷம் தோஷம்தான். இதற்கு ஜாதகரீதியாக மாற்றுவழி இல்லை. வேண்டுமானால் வாழை மரத்தை வெட்டு, தோஷம் தீர எனக்கு இரண்டு ஜதை வேஷ்டி, துண்டு, என் மனைவிக்கு இரண்டு ஜதை சேலை, ரவிக்கை, மயானத்தில் போய் பூஜை போட இரண்டு சேவல்களும், தட்சிணை சில நூறு ரூபாய் கொடுத்து விடுங்கள். செவ்வாய் தோஷத்தை விரட்டி அடிக்கிறேன்.
இது சவாலா? அல்லது ஏமாற்று வித்தையா என்றால், நிச்சயம் ஏமாற்று வித்தைதான். காரணம் செவ்வாய் தோஷத்தை மட்டுமல்ல, எந்த கிரக தோஷத்தையும் விரட்டி அடிக்க முடியாது. மாறாக சரியான, உண்மையான பரிகாரங்களால் சற்றே குறைக்கப் பார்க்கலாம். பரிகாரம் என்பது உண்மையான பிரார்த்தனைதான். இதை சிலர் கிரகங்களுக்கு லஞ்சம் கொடுத்து சரிகட்டப் பார்க்கின்றீர்களா என்று கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள். பரிகாரம் என்பது லஞ்சம் கொடுப்பது அல்ல. உண்மையில் அது சரணாகதி அடைவது. சரணாகதித் தத்துவம் தலைசிறந்தது. நம்மைவிடவும் வலிமையானவர்களை எதிர்ப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா?
எதிர்த்தால் என்ன ஆகும்? இன்னும் இரண்டு அடி, உதை சேர்ந்து விழும். ஆனால் நம்மைத் தாக்கவரும் வலிமையான எதிரியின் முன் பணிந்து நின்றால், அவன் கோபம் குறைந்து நம்மை அடிக்காமல் விட்டுவிடக்கூடும் (அ) ஒன்றிரண்டு அடிகளுடன் தப்பித்துக் கொள்ளலாம். இது போன்றதுதான் பிரார்த்தனை என்பதும். உண்மையான உள்ளத்தின் பிரார்த்தனைக்கு பலன் உண்டு. நம்மைவிட வலிமையான இறைவனிடமும் இறைவனின் பிரதிநிதிகளாகவும், உலகையும் ஜீவன்களையும் இயக்கும் வலிமை படைத்த நவக்கிரகங்களிடம் பணிந்து வேண்டிக்கொள்ளும்போது நம் தீமைகள், சிரமங்கள் பிரச்சனைகள் சற்றுக் குறையலாமல்லவா?
சற்றுக் குறைந்தாலே அது லாபம்தானே? ஒரு லட்சம் நஷ்டமடைய வேண்டியிருக்கும்போது, அந்த நஷ்டம் பாதியளவு குறைந்துவிட்டால், பாதி நமக்கு நன்மைதானே? அந்த அடிப்படையில்தான் பரிகாரங்கள் எனப்படும் பிரார்த்தனை அமைய வேண்டும். கிரகங்களுக்குரிய பரிகாரங்கள் அதற்கு உரிய முறைப்படி செய்ய வேண்டும். அதனால் செய்பவர்களுக்கு சற்றேனும் நிவாரணம் கிடைத்தே தீரும். ஆனால் சரியான வழிமுறையில் செய்யப்படாத பரிகாரங்கள் எப்படி நிவாரணம் தரமுடியும்? தவறான பரிகாரங்களை முறையில்லாமல் செய்து விட்டு நிவாரணம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதிலோ, அல்லது கடவுள் இல்லை, கிரகங்கள் என்பது கட்டுக்கதை என்று கூறிவிடுவதாலோ பிரச்சனை தீர்ந்துவிடுமா?
இம்மாதிரியான பல விஷயங்களை நாம் இச்சிறு நூலில் காணப் போகின்றோம். பல உதாரண ஜாதகங்களை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து அலசப் போகிறோம். கடைசியில் சரியான வழிமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளப் போகின்றோம். 7-ம் பாவம் எனப்படும் களத்திர பாவம் எவ்வாறு மனித வாழ்வில் விந்தைகளையும், விசித்திரங் களையும் விளைவிக்கின்றது என்பதைக் காணப் போகின்றோம். சிலர் வாழ்வு இன்பச் சோலையாகவும், சிலர் வாழ்க்கை பாலைவனமாகவும், சிலர் வாழ்வு சூறாவளியில் அகப்பட்ட படகுபோல் தத்தளிக்கும் நிலையும் பெறுவது எவ்வாறு என்று காணுவதுடன், அதன் உண்மையான தாத்பரியங்களை அறிந்துகொள்ளப் போகின்றோம்.
மேலும் படிக்க : ராசியை போல கரணமும் முக்கியம்
ஏழாம் பாவத்தின் தன்மை:
ஏழாம் பாவம் என்பது உண்மையில் களத்திரத்தை மட்டுமே குறிப்பிடுவதல்ல. மேலும் பல விஷயங்களை அந்த
பாவத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். 1. திருமணம் பற்றிய நிலை; 2. வரும் மனைவி (அ) கணவன் எப்படி? 3. சிற்றின்பம் எனப்படும் உடலுறவின் நிலை; 4. நம்முடைய உறவுமுறைகள்; 5. நமக்குக் கிடைக்கும் சன்மானம்; 6. நாம் செய்யக்கூடிய வியாபாரம்; 7. நாம் சந்திக்கும் வழக்குகள் ஆகியன பற்றியும் 7-ம் பாவம் கூறுகின்றது.
என்றாலும் முக்கியமாக களத்திர பாவம் என்று கூறப்படும் அளவுக்கு வரக்கூடிய மனைவி (அ) கணவனைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளவே இந்த பாவம் பயன்படுவதால், இந்த பாவம் களத்திர பாவம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப் படுகின்றது. ஏழாம் பாவம், மத்ய பாவம் என்றழைக்கப்படும். இந்த பாவம் பாவஸ்புட ரீதியாக அஸ்தமன லக்னம் என்று கூறப்படுகின்றது. காரணம் உதய லக்னம் எனப்படும் உயிர் லக்னத்திற்கு நேர் எதிரில் 180 டிகிரியில் இந்த பாவம் உள்ளதால் இதற்கு இம்மாதிரியாக அஸ்தமன லக்னம் என்று பெயர் பெறுகின்றது.
ஏழாம் பாவமான களத்திர பாவத்தை வைத்துத்தான் வரக்கூடிய கணவன் (அ) மனைவியைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும் உண்மையில் இந்த பாவத்திற்கு வேறு பல பாவங்களும் துணை செய்கின்றது. களத்திர பாவம் ஐம்பது சதவீதம் என்றால் மற்ற பாவங்கள் எல்லாம் சேர்ந்து மற்ற ஐம்பது சதவீத விவரங்களை அளிக்கின்றது. ஆனால் பெரும் பாலானவர்கள் களத்திரத்தை அறிந்துகொள்ள ஏழாம் பாவத்தை மட்டுமே கவனிக்கின்றார்கள். இது தவறான கண்ணோட்டம்.
களத்திர பாவத்திற்கு சரியான, துல்லியமான நிர்ணயம் செய்ய துணைநிற்கும் பாவங்கள்.1. லக்ன பாவம் எனப்படும் முதல் வீடு.2. இரண்டாம் பாவம் எனப்படும் தன பாவம்.
3. மூன்றாம் பாவம் எனப்படும் சகோதர பாவம். 4. 4-ம் பாவம் எனப்படும் மாதுர் பாவம். 5. 5-ம் பாவம் எனப்படும் புத்திர பாவம். 6. ஆயுள் பாவம் எனப்படும் 8-ம் பாவம். 7. புத்திர பாவம் எனப்படும் லாப் பாவம். 8. 12-ம் பாவம் எனப்படும் அயன பாவம் (அ) விரய பாவம். இத்தலை பாவங்களும் களத்திர பாவத்திற்கு துணை செய்கின்றன. .
.இது பல வாசகர்களுக்கு புதுமையான விளக்கமாகத் தோன்றும். ஆனால் உண்மையில் ஜாதகம் என்பது ஒரு பாவமானது. பல பாவங்களுடன் பின்னிப்பிணைந்துதான் பலன்களை தீர்மானம் செய்கின்றது. தனிப்பட்ட முறையில் ஒரு பாவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பலனை நிர்ணயித்துவிட முடியாது. ஜோதிட சாஸ்திரத்தில் இது ஒரு நுணுக்கமான விஷயம். ஒன்றையொன்று தொட்டுத்தான் செல்ல முடியும். இனி ஒவ்வொரு பாவமும் எவ்வாறு களத்திர பாவத்திற்கு துணை செய்கின்றது என்பதைக் கவனிப்போம்.
முதல் பாவம்:
லக்ன பாவமான இந்த பாவம் உயிரைப் பற்றியது மட்டு மல்ல, மெய், நிறம், சொரூபம், திறமை எனப்படுவதைப் பற்றி குறிப்பிடும் இந்த பாவம் முக்கியமானது அல்லவா? ஒருவரின் உருவத் தோற்றம், நிறம், குணாதிசயங்கள், அவரின் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் என்ன என்பதைப் பற்றி கூறும் இந்த பாவத்தை முதலாக வைத்துத்தான் எதிரில் உள்ள பாவத்தை ஆராய வேண்டியுள்ளது. இவரின் குணங்களுக்கு ஏற்பத்தானே இவருக்கு வரவேண்டிய துணை எப்படி அமைய வேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும்? திருமணப் பொருத்தம் பார்க்க குணம் அவசியம். அந்த லக்கினத்தை, மற்றும் அதன் அதிபதியைக் கொண்டு தீர்மானம் செய்யவேண்டியுள்ளது.
இரண்டாம் பாவம் :
இது எதற்காக? இதுவும் தேவையா? ஆம்; மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவற்றில் இதுவும் ஒன்றுதான். தான் பிறந்த குடும்பம் மட்டுமல்லாமல், தனக்கு அமையும் சுயகுடும்பம் எப்படி இருக்கும்? திருமணம் செய்து கொண்டால் மட்டும் போதுமா? வாழ்க்கைச் சக்கரம் செம்மையாக ஓட பணம் வேண்டுமே! அடுத்த நாளைக்கு, அதற்குப் பிறகு எதிர்காலத்துக்கு என்று செல்வச் சேமிப்பு வேண்டுமே! துணையை திருப்திப்படுத்த நல்ல இனிமையான பேச்சுக்கள் பேசவேண்டுமே! அதை விடுத்து ஸ்திர புத்தி இல்லாமல் முன் கோபத்துடன் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தால் தாம்பத்ய வாழ்க்கை சுவைக்குமா? அது மட்டுமல்லாமல் இந்த பாவம் 7-ம் பாவத்துக்கு 8-ம் பாவமல்லவா? எனவே வரக்கூடிய துணையின் ஆயுளை நிர்ணயம் செய்யக்கூடிய முக்கியமான இடமாயிற்றே .
எனவேதான் இந்த இடம் எந்த பாவக் கிரகங்களும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இந்த இரண்டாம் இடத்தில் பாபக் கிரகங்கள் உச்சம் பெறுமானால் அது வரக்கூடிய துணையின் ஆயுளுக்கு பங்கத்தை ஏற்படுத்தும். சுபர்கள் கூட சிலசமயங்களில் சிரமங்களை அளித்து விடுகின்றார்கள். எனவே துணையைப் பற்றி நிர்ணயம் செய்ய இந்த பாவம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
சரி, ஒப்புக்கொள்கின்றோம். ஆனால் மூன்றாம் பாவமான சகோதர பாவத்துக்கு இங்கே என்ன வேலை சரியான கேள்வி. ஐயா, மூன்றாம் இடம் வெறும் சகோதர பாவத்தை மட்டும் குறிப்பிடவில்லையே. இல்வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத போக சக்தியை – அதாவது உடல் உறவு கொள்ளும் வலிமையைப் பற்றி குறிப்பிடுகின்றதே! உலகில் ஜீவன்களின் உருவாக்கம் உடல் உறவின் அடிப்படையில்தானே உள்ளது? அதிலும் முக்கியமாக மனித ஜீவன்களுக்கு வெறும் ஜீவன்களின் என்றில்லாமல், உணர்வுகளின் சங்கமமும் உடல் உறவுதானோ ?
உடல் உறவு திருப்தியாக அமையாதபோது எத்தனை விதமான சிக்கல்கள் தோன்றுகின்றது. ஆண் வேறு பெண்ணை நாட, பெண் வேறு ஆணை நாட, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடே அடிபட்டு ஆட்டம் கண்டுவிடுகின்றதே. தவறாகச் செல்லும் வழிகளுக்கு அடிப்படையாக உடல் உறவல்லவா காரணமாகின்றது? அது மட்டுமல்லாமல் உடல் பலம், விந்துவின் சக்தி ஆகியவற்றுக்கும் இந்த மூன்றாம் இடம்தானே முக்கிய இடம் வகிக்கின்றது? அத்துடன் தைரியத்தையும் இந்த இடம் தானே கொடுக்கின்றது? தனக்கு வந்த துணையை நல்ல முறையில் கையாள்வதற்கும் தைரியம் தேவை. அதேசமயம் திருப்தியேற் படாத பட்சத்தில் வேறொன்றை நாடுவதற்கும் தைரியம் தேவையல்லவா? எனவே 3-ம் இடத்தை தவிர்த்து ஒதுக்க முடியாது.
அடுத்த கேள்வி கேட்குமுன் நான்காம் பாவத்தைப் பற்றிக் கூறிவிடுகின்றேன். சுக ஸ்தானம் எனப்படும் 4 – ம் இடம் முன்புகூறிய உடல் உறவின் சுகம் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து சுகபோகங்களையும் குறிப்பிடும் ஸ்தானம். 3-ம் இடம் போகத்தை மட்டும் குறிப்பிட்டது. இந்த ஸ்தானம் சுகத்தையும் சேர்த்துக்கொண்டது. வீட்டிற்கு வரும் கணவனை நன்கு உபசரித்து அவனுக்கு எதெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் கவனித்து செய்து, அவன் சுகமாக சிரமம் இல்லாமல் வாழச் செய்வது மனைவியின் கடமை. தனக்காக அனைத்தையும் செய்யும் மனைவியை நல்ல இல்லம், வாகன வசதி, பசு, கன்று வைத்து பால் பாக்கியத்தை உருவாக்கி, மனைவிக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, மனைவியை சுகமாக வைத்துக்கொள்வது கணவனின் பொறுப்பு என்ற வகையில் வாழ்க்கைக்கு 4-ம் இடம் உதவி செய்கின்றது.
5-ம் பாவத்தைப் பற்றி கேட்கவே மாட்டீர்கள். இது மிகவும் முக்கியமானது. இல்வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். இல்வாழ்க்கையின் தத்துவமே இந்த ஐந்தாம் பாவம்தானே? உடல் உறவு வெறும் உணர்வுகளின் சங்கமமோ அல்லது ஆன்ம திருப்தி மட்டுமோ அல்லவே? அதன் நிறைவு புத்திரபாக்கியத்தில்தானே? சந்ததி தொடரபுத்திரர்களோ, புத்திரிகளோ வேண்டுமல்லவா? திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே ‘என்னங்க ஜோஸியரே, புத்திர பாக்கியம் எப்படி?’ என்ற கேள்விதானே முதலில் வருகின்றது. எனவே 5-ம் இடம் அதிமுக்கியமான இடத்தை வகிக்கின்றது.
அதை அடுத்து 8-ம் பாவமான ஆயுள் ஸ்தானம். உண்மையில் இதை இரண்டாவதாக கொடுத்திருக்க வேண்டும். வரிசையாகக் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த இடத்தில் அறிவிக்கின்றேன். எல்லாம் சரியாக அமைந்து விடுகின்றது. அவற்றை ஆண்டு அனுபவிக்க ஆயுள் பலம் வேண்டாமா? முதலில் பொருத்தம் பார்க்க ஆரம்பிக்கும்போது ஆயுள் பலம் உண்டா? எந்த அளவு என்று தீர்மானித்துக் கொண்டபின் குறைவு என்பதை அறிந்துகொண்டால் பொருத்தம் பார்ப்பதே தேவையற்றதாகி விடுமே! எனவே ஆண், பெண் இருவருக்கும் ஆயுள் பலம் எப்படி என்று அறிந்துகொள்ளுதல் முதல் தேவையாகி விடுகின்றது.
இதே 8-ம் பாவம்தான் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்று கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் 7-ம் இடத்திற்கு 8-ம் இடமான 2-ம் இடம்தான் மாங்கல்ய ஸ்தானம். நம் இந்து தர்ம சாஸ்திரத்தின்படி கணவன் உயிருடன் இருக்கும் வரைதான் பெண்ணுக்கு மாங்கல்யம் இருக்கும். கணவன் இறந்துவிட்டால் மனைவி மாங்கல்யத்தை இழக்க வேண்டியேற்பட்டு விதவையாகி விடுகின்றாள். பூவையும், பொட்டையும், அலங்காரங்களையும் துறந்துவிட வேண்டியேர் படுகின்றது. மாங்கல்யத்தைத் துறந்து விடலாம். அது கணவன் கட்டியது. அவன் போன பின் அவன் கட்டிய மாங்கல்யத்துக்கு உரிய மதிப்பு இல்லை. ஆனால் பூவும், பொட்டும் அப்படியல்லவே !
இதை ஏன் துறக்க வேண்டும்? இப்படி சில சீர்திருத்த வாதிகள் கேட்கின்றார்கள். இவர்களுக்கு நம் சாஸ்திரத்தின் அடிப்படையும் தெரியாது. பண்பாடும் தெரியாது. இப்படித் கூறுபவர்கள் ஒருதலைப்பட்சமான வாதத்தை முன்வைக்கின்றார்கள். இந்த சர்ச்சை நமக்கு தேவையானதுதானா என்ற கேள்வி வேண்டாம். மாங்கல்யம் எவ்வளவு புனிதமானது என்பதையும்விட அதை தாங்கி நிற்கும் பெண் எவ்வளவு புனிதமானவள் என்பதை நாம் அறிந்துகொண்டால்தானே நம்மிடம் வரும் வாடிக்கை. யாளருக்கு நல்ல முறையில் பொருத்தம் பார்த்துக் கூறமுடியும்?
ஆதிகால முதலே நம் பாரத நாட்டில் பெண்களுக்குத் தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரத்திலும் பெண்களுக்குத்தான் முதன்மையான ஸ்தானம் கொடுக்கப் பட்டுள்ளது. 4- ம் இடம் தாய்க்கு. 7-ம் இடம் தாரத்துக்கு. அதற்குப் பிறகு 9-ம் இடம்தான் தந்தைக்கு.ஏதோ இடைப் பட்ட காலத்தில் பெண்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் புராணங்களில் பெண்மைக்குத் தான் முதலிடம். கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு சுயம்வரம் நடந்துள்ளது. சுயம்வரத்தில் பெண் தனக்குப் பிடித்தமானவனை தேர்ந்தெடுத்து மணம் செய்து கொள்வாள்.
இராமாயணத்தில் ராமரை கோசலையின் திருக்குமரா, கொஞ்சு மொழி ராமா என்றுதான் அழைத்துள்ளார்கள். மகாபாரதத்தில் குந்தியின் வயிற்றில் பிறந்ததால்தானே பஞ்ச பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் தந்தையர்கள் வேறு. அப்படியிருந்தும் திருவயிறு உதித்ததால் தானே அவர்களுக்குரிய அந்தஸ்து கிடைத்தது. அந்தக் காலத்தில் பெண்மைக்கு முதலிடம் கொடுத்தார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட பெண்ணின் கற்புக்கு முதலிடம் கொடுத்து அந்த கற்புக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவளைப் பார்த்து பிறர் மோகம் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், அவள் தன்னை அலங்காரம் செய்து தன் அழகை மிகைப்படுத்தி பிறரை தன்பால் இழுக்காமல் இருக்க தன் பூவையும், பொட்டையும் துறக்கின்றாள்.
இம்மாதிரியான புனிதமான செயல் தற்போது மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது. உண்மையான காரணம் எதுவோ அதை விட்டுவிட்டு அவரவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் மேடையில் பேசியும், கதைகளில் எழுதியும் புதுமையைச் செய்கின்றார்களாம். நம் முன்னோர்கள் நம்மைவிட அதிபுத்திசாலிகள். அவர்களுக் கிருந்த சிறந்த அறிவும் பண்பாடும் நமக்கு இல்லையென்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இம்மாதிரியாக கணவனின் ஆயுள் பாவத்தை பெண்ணின் இரண்டாம் பாவத்தைக் கொண்டு நிர்ணயம் செய்ய முடியும். அதனால்தான் 2-ம் இடம், 8-ம் இடம் மற்றும் 7ம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் சேர்த்துத் தான் இந்த விதி. எனவே எட்டாம் பாவம் இல்வாழ்க்கைக்கு மிகவும் ஒத்துழைக்கின்றது. பெண்ணுக்கு கர்ப்பஸ்தானமும் இந்த 8ம் இடம்தான்.
அடுத்து 11-ம் பாவம். லாப பாவமான இது இல்வாழ்க்கைக்கு எந்தவிதத்தில் பயன்படுகின்றது? 11-ம் பாவம் இரண்டாம் மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பொருத்தம் பார்க்கும் போதே ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தரம் ஏற்படுமா போதே ஒருவருக்கு ஓடியது அவசியம்தானே? சிலர் 7-க்கு மூன்றாம் இடத்தைக் கொண்டுதான் இளைய தாரத்தைப் பற்றிக் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது சரியானதாக இல்லை. 7-க்கு 3-ம் இடம் மனைவியின் சகோதரத்தைப் பற்றித்தான் குறிப்பிடும். 11-ம் இடம்தான் என்று கீரனூர் நடராஜன் எழுதிய “ஜாதகலங்காரம்” என்ற மூலநூல் கூறுகின்றது. எனவே 11-ம் பாவத்தைக் கொண்டு இளைய தாரம் உண்டா என்று கவனிக்கலாம்.
கடைசியாக 12-ம் பாவம் எனப்படும் அயன சயன ஸ்தானம்கூட இல்வாழ்க்கைக்கு துணை செய்கின்றது. படுக்கை சுகம் எந்த அளவு உள்ளது என்பதை அறிய வேண்டும். 12-ம் பாவம் வெறும் தூக்கத்தை மட்டுமே தெரிவிக்கும் என்று கருதிவிடக் கூடாது. மனைவியுடன் எந்த அளவுக்கு இணைந்து இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன் வேறு பல பெண்களுடன் தன் படுக்கை சுகத்தை பகிர்ந்து கொள்ளுவாரா என்பதையும் கவனிக்க முடியும். இதே நிலையை ஒரு பெண்ணின் ஜாதகத்திலும்கூட 12-ம் இடத்தைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
இதுவரையிலும் 7-ம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிக் கண்டோம். இனி ஏழாம் பாவமாகிய களத்திர பாவத்தைக் கொண்டு எவ்விதமான பல விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதைக் கவனிக்கலாம். களத்திர பாவத்தின் முழுமையான நிலையைப் பற்றி அறிந்துகொள்ள ஏழாம் பாவாதிபதி எந்த அளவுக்கு பயன்படுவாரோ அந்த அளவுக்கு சற்றும் குறையாமல் சுக்கிரனும் பயன்படுவார். சுக்கிரன் களத்திரகாரன் ஆயிற்றே? அவர் இல்லாமல் களத்திர பாவ ஆய்வா? அத்துடன் செவ்வாய் வேறு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
செவ்வாய் தோஷத்திற்கு மட்டும்தான் செவ்வாய் என்று கருதிவிடக் கூடாது. செவ்வாய் பிறப்புறுப்பு ஸ்தானமான விர்ச்சிகத்தின் அதிபதி என்பதால், அவர்களின் இன்ப வேட்கை எவ்வாறு இருக்கும் என்பதுடன் அவர்களின் குண விசேஷங்கள் எவ்வாறு உள்ளது என்பதைக் காணவும் செவ்வாய் துணை செய்கின்றான். அது மட்டுமல்லாமல் மங்கையர் ஜாதகங்களில் செவ்வாய்க்கும், சந்திரனுக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. பெண்களின் ரஜஸ்வலை எனப்படும் மாதாந்திரபோக்கு (மென்ஸஸ்) ஏற்படுவதற்கு சந்திரனும் செவ்வாயும்தான் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்கள்.
தொடருந்து படிக்கவும்…
என்றும் அன்புடன் :
S.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…