தொழிலாளர் தினம் ( MAY 1 2024 )

Ulaipalar Dhinam Valthukkal :: Behanceமே முதல் நாள், உலக உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் சுலபமாக கைகூடிவிடவில்லை. பல போராட்டங்களுக்கு பின் விளைந்தது.

மே தினம் உருவான வரலாற்றை பார்ப்போம்…

தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு, 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்தாக வேண்டிய நிலை கி.பி.,18ம் நுாற்றாண்டில் நிலவியது. முழுநேரமும் தொழிற்சாலையிலோ, வேலையிடத்திலோ இருந்தாக வேண்டும். குழந்தைகளை கொஞ்சவோ, குடும்பத்தை கவனிக்கவோ போதிய நேரம் இருக்காது; சம்பளமும் குறைவு.

இந்த நிலையை மாற்ற, உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஒரு நாளில், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கை எழுந்தது.

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற அமைப்பு, எட்டு மணிநேர வேலையை வலியுறுத்தி போராடி வந்தது. இந்த அமைப்பு, அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தை, மே 1, 1886ல் அறைகூவல் விடுத்தது. இந்த அறைகூவலே, மே தினம் பிறப்பதற்கு காரணமாயிற்று.

அழைப்பை ஏற்று அமெரிக்காவில் தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோரில், 3.5 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க பெருநிறுவனங்கள் தவித்தன. ரயில் போக்குவரத்தும் முடங்கியது.

நிலக்கரி சுரங்கம், ரயில்வே தொழில், கப்பல் கட்டும் தொழில் என, பல தரப்பு தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா, சிகாகோ நகர ஹேமார்க்கெட் சதுக்கத்தில்,

மே 4,  1886ல் தொழிலாளர்கள் திரண்டனர்; மாபெரும் பேரணி நடத்தினர். ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வதை வலியுறுத்தி முழங்கினர்.

அப்போது, கூட்டத்தின் நடுவே திடீர் என குண்டு வெடித்தது. பெரும் கலவரம் மூண்டது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது காவல்துறை. இதில், 11 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது.

இதையடுத்து, பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. கலவரத்தை துாண்டியதாக எழுத்தாளர்கள் உள்பட, ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதில் சிலரை, நவம்பர் 11, 1887 அன்று துாக்கிலிட்டனர். அவர்களது இறுதி ஊர்வலத்தில், 5 லட்சம் பேர் பங்கேற்றனர். அமெரிக்காவில் அது கறுப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், சர்வதேச தொழிலாளர் மன்றம், ஜூலை 14, 1889ல் கூடியது.

இது, பொதுவுடமை இயக்க, இரண்டாவது அகிலத்தின் துவக்கமாக கருதப்படுகிறது. இதில், பொதுவுடமை இயக்க முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரடெரிக் ஏங்கெல்ஸ் உட்பட, 18 நாடுகளைச் சேர்ந்த, 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம், எட்டு மணிநேர வேலையை வலியுறுத்தியது. இதுதான் மே முதல் நாளை உலக உழைப்பாளர் தினமாக கொண்டாட வழிசெய்துள்ளது. இந்தியாவில், சென்னை மாநகரில் தொழிலாளர் தினம், 1923ல் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

மே தினம் கொண்டாட்டம் ஏன்?

19 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் பட்டனர். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘தொழிலாளர்கள் கூட்டமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் சார்பில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து 1886ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் 3லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதும் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

தொழிலாளர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல், 1890-ம் ஆண்டு அவர்கள் கோரிக்கையான 8 மணி நேர வேலைக்கு அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. இது தான் மே தினம் உருவான வரலாறு.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை கோரிக்கையை நினைவு கூறும் விதத்திலும், நாடு, இனம்,மொழி இவற்றைக் கடந்து, அமெரிக்காவில் நடந்து போராட்டத்தின் போது தொழிலாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் மே ஒன்றாம் தேதி உலகெங்கிலும் உழைப்பாளர்கள் நாளாக கொண்டாடப் படுகிறது. 1890ஆம் ஆண்டிலேயே சில நாடுகளில் உழைப்பாளர் நாள் கொண்டாடப்பட்டது.

‘இரண்டாம் உலகம் , என்ற பெயரில் சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு 1889-ல் பாரிஸ் மாநகரில் நடைபெற்றது.

அதில் சிகாகோ தொழிலாளர்கள் போராட்டத்தைப் போற்றும் வகையில் மே மாதம் ஒன்றாம் தேதியை உழைப்பாளர் நாளைக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை ரேமண்ட் லவிக்னே முன்மொழிந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

இதன் பிறகே உலக நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் அனைத்தும் இந்த நாளை உழைப்பாளர் தினமாக முறைப்படி கொண்டாடின.

இன்று உலகமெங்கும் ஏறத்தாழ 80 நாடுகளுக்கு மேல் மே ஆறாம் தேதியை உழைப்பாளர்கள் தினமாக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில், முதல் தொழிலாளர் தினம் 1923 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. தொழிலாளர் கிசான் கட்சிதான் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் மே தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

திருவல்லி கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி என்பவர் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்கார வேலர் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர் கிசான் கட்சியின் தலைவரரும் சிறந்த சீர்திருத்த வாதியுமான சிங்காரவேலர் உயர்நீதிமன்றம் அருகே கடற்கரையில் மே தினத்தைக் கொடி ஏற்றி கொண்டாடினார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் , அப்போதே பாரத நாடு விடுதலை அடைந்ததாக எண்ணி, இந்திய தேசியக் கொடி ஏற்றி , பின்னர் சிகப்பு வண்ணக் கொடி ஏற்றினார்.

சிங்காரவேலர் கோடி ஏற்றி மே தின உரை யாற்றிய இடத்தில் பிரபல சிற்பி தேவிபிரசாத் ராய் சௌத்ரியால் கலைவண்ணத்தில் உருவான உழைப்பாளர் சிலை 1956ம் ஆண்டு குடியரசு நாளில் காமராசரால் நிறுவப் பட்டது.

மே தினத்தைப் போற்றும் விதமாக முன்னாள் பிரதமர் வி.பி.சிங், அந்நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தார் .

இந்தியா விடுதலை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே , ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற பெயரில் இந்தியாவின் முதல் தொழில் சங்கம் தொடங்கப் பட்டது.

தமிழ்த் தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.க, தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உரிய விதிமுறைகளுடன் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை 1918 ஏப்ரல் 27ம் தேதி சென்னையில் உருவாக்கினார். இந்தியாவில் தொழிலாளர்கள் உரிமைகள் காக்க தொடங்கப் பட்ட எல்லா தொழில் சங்கங்களுக்கும் இதுதான் முன்னோடி சங்கம்.

இப்படி இந்திய உழைப்பாளர்களுக்காக போராடிய முன்னோர்களை நினைவு கொள்வதோடு , அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

என்றும் அன்புடன் :
S.சுதாகரன்

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்… 

Leave a Reply